இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சி.எஸ்.அமுதன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி, அஜித், த்ரிஷா நடிப்பில் வெளியானது, ‘குட் பேட் அக்லி'. கடந்த 10ஆம் தேதி வெளியானது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்...’, ‘இளமை இதோ இதோ...’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி..’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தி உள்ளனர். இந்நிலையில், தன்னுடைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் இளையராஜா தரப்பில், ‘குட் பேட் அக்லி' பட தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க: அடுத்து லக்கிபாஸ்கராக அவதாரம் எடுக்கும் AK..! இயக்குனரின் கதைக்கு கிரீன் சிக்னல்..!

அந்த நோட்டீஸில், "ஒரு வார காலத்துக்குள் சம்பந்தப்பட்ட பாடல்களை நீக்க வேண்டும். பாடல்களைப் பயன்படுத்தியதற்காக 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டது. ஆனால், இசை உரிமை உள்ளவர்களிடம் அனுமதி பெற்றுவிட்டதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. தணிக்கை சான்றிதழில் இசை உரிமை நிறுவனத்திடம் இருந்து அனுமதி வாங்கியதை வைத்து பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினார்கள். இளையராஜாவை விமர்சிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சி.எஸ்.அமுதன் பதிவு ஒன்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதில், “ரத்தம் படத்தில் ஒரு கூட்டுக் கிளியாக பாடலை பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்டு இளையராஜாவின் குழுவைத் தொடர்பு கொண்டோம். எங்கள் தயாரிப்பாளர்கள் பணம் கொடுப்பதற்கு தயாராகவே இருந்தனர். ஆனால், பணம் எதுவும் தேவையில்லை எனவும், பயன்படுத்திக் கொள்ளவும் என்று அவர்கள் தெரிவித்தார்கள். அவர் (இளையராஜா) தன்னிடம் அனுமதியை மட்டுமே எதிர்பார்க்கிறார். அது நாம் செய்யக்கூடியதுதான். ஒரு துறையாக நாம் அவருடன் நிற்கவில்லை என்றால், வேறு யார்தான் அதற்கு தகுதியானவர்?” என்று தெரிவித்துள்ளார் சி.எஸ்.அமுதன்.
இதையும் படிங்க: அஜீத் படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கு... கடுப்பான தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ்!!