''மாண்புமிகு மன்னராட்சி முதல்வரே, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீரப்பா சொன்னால் போதாது. அதை செயலிலும், ஆட்சியிலும் காட்டணும் முதல்வரே!'' என தவெக தலைவர் விஜய், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரடியாக அட்டாக் செய்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தவெக முதல் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், ''நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் என்னுடைய வணக்கம். கதறல் சத்தம் எல்லாம் எப்படி இருக்கிறது? தமிழுக்கும் அமுதென்று பேர். அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர். இன்னைக்கு தமிழகம் இருக்கும் சூழலில், நாம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்க எல்லோரும் புரிந்து வைத்து இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

அரசியல் என்றால் என்னங்க..? ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும் என்பது அரசியலா..? இல்லை, ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழகத்தை சுரண்டி நல்லா கொழுக்க வேண்டும் என்று நினைப்பது அரசியலா? எல்லோரும் நல்லா வாழ வேண்டும் என்பது தான் அரசியல். அது தான் நம்ம அரசியல்.
கட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம், தினம் மக்கள் பிரச்னையை மடைமாற்றி, மக்கள் ஆட்சியை மன்னர் ஆட்சி போல நடத்துகிற இவர்கள் செய்யும் செயகள் ஒன்றா, இரண்டா? மாநாட்டில் ஆரம்பித்தும், இன்றைக்கு பொதுக்குழு வரைக்கும் எங்கெல்லாம், எப்படி எல்லாம் தடைகள்? அத்தனையும் தாண்டியும் மக்கள் சந்திப்புகள் நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கும்.

ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், ரமேஷ் இவர்கள் எல்லாம் போட்டு அடி, அடி என்று அடிக்கிறார்கள். நாமும் அப்படி போட்டு அடிக்கணுமா? என்று மனதிற்குள் யோசனையாகத்தான் இருக்கிறது.
மன்னராட்சி முதல்வர் அவர்களே, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது. செயலிலும், ஆட்சியிலும் காட்ட வேண்டும். ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சியை பாசிச ஆட்சி என்று சொல்லும் நீங்கள் மட்டும் என்ன செய்றீங்க? அதுக்கு கொஞ்சமும் குறைவில்லாத ஆட்சி தானே நடத்துகிறீர்கள்? என் கட்சியினரையும் மக்களையும் சந்திக்க தடை போட நீங்கள் யார்?

தடையை மீறி என் மக்களை சந்திக்க வேண்டும் என்று முடிவு பண்ணிவிட்டேன் என்றால் போயே தீருவேன். சட்டத்தை மதிக்க வேண்டும் என்று ஒரே காரணத்தினால்தான் அமைதியாக இருக்கிறேன். நேற்று வந்தவன் எல்லாம் முதல்வர் ஆக கனவு காண்கிறான் என்கிறீர்களே? அது நடக்கவே நடக்காது என்றும் சொல்றீங்க. அப்படியெனில் ஏன் எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை எனது கட்சிக்கு போடுகிறீர்கள்?

அணை போட்டு ஆற்றை தடுக்கலாம்... காற்றை தடுக்க முடியாது. தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவளியாக மாறும். சக்தி மிக்க புயலாக மாறும். எனது அருமை தமிழக வெற்றிக்கழக தோழர்களே, நாம் மாநாட்டில் ஒரு விஷயத்தை வலியுறுத்தி சொன்னேன். அதைத்தான் இங்க திரும்பவும் சொல்கிறேன். இந்த மண், பிளவுவாத சக்திகளுக்கு எதிரான மண். சகோதரத்துவ மண்.

இதுவரை தமிழகம் காணாத ஒரு தேர்தலை அடுத்தாண்டில் தமிழகம் காணப் போகிறது. இரண்டே இரண்டு பேருக்கு இடையில் தான் போட்டி. த.வெ.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் தான் தேர்தலில் போட்டி நிலவும். தமிழகத்தில் உண்மையான மக்களாட்சி மலர தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்.இதுவரைக்கும் சந்திக்காத வித்தியாசமான தேர்தலை அடுத்த வருடம் தமிழ்நாடு சந்திக்கும்'' என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கனிமொழி அக்கா..! உங்க அண்ணா கிட்ட சொல்லுங்க.. இல்ல என் அண்ணன் கிட்ட விடுங்க - தவெக நிர்வாகி மாஸ் ஸ்பீச்..!
இதையும் படிங்க: இனி தளபதி அல்ல... விஜய்க்கு புதிய பட்டப்பெயர் சூட்டிய ஆதவ் அர்ஜூனா..!