போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருள் நுகர்வு கலாச்சாரத்தால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் குற்ற சம்பவங்கள் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த போதைபொருள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக கோவை மாநகரில் போதை பொருள் தடுப்பு தொடர்பாக காவல் ஆணையர் சரவண சுந்தர் அவர்களின் உத்தரவு பேரில், தனிப்படை சார்பு ஆய்வாளர் விவேக் மற்றும் தனபால் தலைமையிலான தனிப்படையினர் ஆர்.எஸ் புரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர்.

அப்போது மேட்டுப்பாளையம் ரோடு பூமார்க்கெட் அம்மா உணவகம் கேட் அருகில் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்த மணிகண்டன் (வயது 39), விநாயகம் (வயது 34), கிருஷ்ணகாந்த் (வயது 34), மகாவிஷ்ணு (வயது 28), ஆதர்ஸ் டால்ஸ்டாய் (வயது 24) , ரிதேஷ் லம்பா (வயது 41), மற்றும் ரோகன் ஷெட்டி (வயது 30) ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இருந்து MDMA (ECSTASY), MDMA பவுடர், கொகைன், கிரீன் கஞ்சா, உலர்ந்த கஞ்சா, குஷ், ரூ. 25 லட்சம் ரொக்கம், பணம் எண்ணும் இயந்திரம், போதை பொருள் எடை பார்க்கும் இயந்திரம், Corona Extra பீர் பாட்டில்கள், Hoegaarden பீர் பாட்டில்கள், CYT MERLOT ஒயின் பாட்டில்கள், மூன்று கார்கள் மற்றும் 12 செல்போன்கள் உள்ளிட்ட 70 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: ‘முதலில் புரிந்து கொள்ளுங்கள்’.. காங்கிரஸ் எம்.பி மீதான FIR ரத்து.. போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

விசாரணையில், மணிகண்டன் கோயம்புத்தூர் ராமநாதபுரத்தை சேர்ந்த பிதேஷ் லம்பா மூலம் மகாராஷ்டிராவிலிருந்து ஜேக்கப் பிராங்கிளின் மூலமாக MDMA பில்ஸ் மற்றும் கொகைன் ஆகியவற்றை பெற்று விற்றதும், கிரிஷ் ரோகன் ஷெட்டி இமாச்சல் பிரதேசத்தில் இருந்து கஞ்சா மற்றும் உயர்தர குஷ், கிரீன் கஞ்சா போன்ற பொருட்களை தனது நண்பர்கள் மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் கஞ்சா விற்பனை மூலம் கோவை புதூரில் வீடு கட்டி வருவதும், காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியில் புதிய வீடு மற்றும் வீட்டு மனை வாங்கியதும் தெரியவந்து உள்ளது. இந்த சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மகாவிஷ்ணு என்பவர் கோவை மாவட்ட பொருளாதர குற்றப்பிரிவு பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் விஜய் லட்சுமியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட 12 வங்கி கணக்குகள் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட ஏழு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். கோவையில் பல லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள போதை பொருட்கள் மற்றும் ஏழு பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: உயர் ரக போதை பொருள், மதுபானங்கள் விற்பனை.. எஸ்.ஐ மகன் உட்பட 7 பேர் கைது..!