மும்மொழிக் கொள்கை விவகாரம் தான் இன்றைய தேதிக்கு மத்திய - மாநில அரசுகளின் ஹாட் டாபிக்காக உள்ளது. மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய தேசியக் கல்விக் கொள்கை - 2020ஐ தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு செயல்படுத்தினால் தான் தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியைக் கூட தருவோம் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தேசியக் கல்விக் கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து சமக்கல்வி என்ற பெயரில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜக நிர்வாகிகள் இதற்காக பொதுமக்களை சந்தித்து கையெழுத்து பெற்று வருகின்றனர். அதேசமயம், காவல்துறையிடம் முறைப்படி அனுமதி பெறாமல் கையெழுத்து இயக்கம் நடத்தும் பாஜக நிர்வாகிகளை போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர்.
இதையும் படிங்க: நாங்க பிடிவாதமா இல்ல, தெளிவா இருக்கோம்! பாஜகவை ரோஸ்ட் செய்த முதல்வர்.

இந்நிலையில் புதியகல்வி (puthiyakalvi.in) என்ற பெயரில் இணையதளம் ஒன்றை தமிழக பாஜக தொடங்கி உள்ளது. அதன் முகப்பு பக்கத்தில் NEP 2020 அறிவோம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையும், பொய் பிரசாரங்களை உடைத்தல் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.
தேச முன்னேற்றத்திற்காக தேசிய கல்விக் கொள்கையை ஊக்குவிக்கவும் தரமான கல்வி, இந்தியாவின் அறிவியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு வலிமைக்கான அடித்தளமாக இருக்கும் என்பதால், தேசிய கல்விக் கொள்கையை ஆதரிக்கவும் என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் வாயிலாக கையெழுத்து போட விரும்புபவரின் மொபைல் எண்ணை பதிவு செய்ய ஒரு இடமும், கையெழுத்து போட ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி நிலவரப்படி அந்த இணையதளத்தில் 2,06834 பேர் கையெழுத்து இட்டுள்ளனர்.

தேசிய கல்விக்கொள்கை குறித்து தலைவர்களின் கருத்து என்ற தலைப்பின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், சுயலாபத்திற்காக, தேசிய கல்விக் கொள்கையில் பொய்ப் பிரச்சாரம் செய்யும் தலைவர்கள் என்ற தலைப்பின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தோழமைக் கட்சித் தலைவர்களின் கருத்துகள் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: 'திமுக-வின் பொய் அரசியலை சல்லி சல்லியாக உடைப்பேன்...' சபதம் போட்ட அண்ணாமலை..!