அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து நீக்கமா.? பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் விளக்கம்!!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் என பரவும் தகவல் குறித்து அக்கட்சியின் மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.
தருமபுரியில் கே.பி. ராமலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திமுக அரசு அதன் ஊழல்களையும், கூட்டணி கட்சிகள் செய்துள்ள ஊழல்களையும் திசை திருப்ப முயல்கிறது. இதற்காக ஏதாவது ஒரு விஷயத்தைப் பூதாகரமாக்கி ஊடக விவாதங்களை திட்டமிட்டே பெரிதாக்கி வருகிறது.
உதாரணமாக, டாஸ்மாக் ஊழல், செல்வப்பெருந்தகை செய்துள்ள ஊழல், அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நிதி வழங்குவதில் ஊழல் உள்ளிட்டவற்றைத் திசை திருப்ப மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று போராடுகிறது. மும்மொழிக் கொள்கையை எதிர்த்து போராடுவதாகவும் நாடகமாடி வருகிறார்கள்.
மெட்ரிக் பள்ளிகள் மாநில அரசின் தடையில்லா சான்று பெற பள்ளிக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் சங்கம் சார்பில் வசூலிக்கப்படுகிறது. இதையெல்லாம் மறைக்கவே ஊடகங்களை திமுக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. உலகம் முழுக்க உள்ள வல்லமையான அரசுகள் எல்லாம் இந்திய பிரதமரின் எண்ணங்களையும், லட்சியங்களையும் பின்பற்றும் வகையில் இந்திய அரசும், தலைவராக மோடியும் உள்ளனர். அவர் தமிழகத்தில் நடைபெற உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ளார்.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று திறந்து வைக்கிறார். இதற்காக தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரும் நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். திமுக ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். அதற்காக திமுகவை எதிர்க்கும் அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்றுபட வேண்டும். கட்சி நலனை முக்கியமானதாகக் கருதாமல் தமிழகத்தின் நலனை முக்கியமானதாகக் கருத வேண்டும். தமிழக மக்களை ஊழல்வாதிகளிடமிருந்தும், அதிகார துஷ்பிரயோகத்திடமிருந்தும் விடுவிக்க வேண்டும். அதற்காக ஒன்றுபட வேண்டும்.
இதையும் படிங்க: அடித்து சவால் விட்ட துரைமுருகன்..! திமுகவுடன் கைகோர்த்த பாஜக..!
இந்திய மாநிலங்கள் அனைத்திலும் பாஜக மாவட்ட தலைவர்கள் தேர்தல் முடிவுற்று மாநில தலைவர்கள் தேர்தல் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தேசிய தலைவர் தேர்தல் நடைபெறும். அதையொட்டியே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் என்று தகவல் பரவியிருக்கலாம்” என்று கே.பி. ராமலிங்கம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “அதிமுக வேண்டாம்; அண்ணாமலை தான் வேணும்” - பாஜக தொண்டர்கள் பார்த்த உள்ளடி வேலை...!