சென்னை மாநகராட்சியில், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்போக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என தற்போது 15 மண்டலங்கள் உள்ளன.

சென்னை மாநகராட்சியின் நிர்வாக எல்லைகளை மாற்றி அமைப்பதற்காக முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மண்டலங்களின் எண்ணிக்கை இருவதாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியானது, தற்போது 15 மண்டலங்களில் 200 வார்டுகளை கொண்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைகளுக்குள் சட்டப்பேரவையின் 22 தொகுதிகள் உள்ளடங்கியுள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலத்தின் நிருவாக எல்லைகளும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளும் தற்போது ஒருசேர அமையவில்லை. இதன் காரணமாக, பல்வேறு நிருவாக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலங்களுக்குட்பட்ட நிருவாக பகுதிகளை தற்போதைய மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை அடர்த்தி மற்றும் வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் நிருவாக எல்லைகளை மாற்றியமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘மோசமான நிர்வாகத்தை மறைக்க முடியாதுங்க’... மு.க ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதிலடி..!

மக்கள்தொகை அடர்த்தி அதிகமுள்ள மண்டலங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதில் கடும் நிருவாக இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மாநகரின் தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள்தொகை தற்போது சுமார் 85 இலட்சத்தைக் கடந்துள்ள நிலையில் மேலும் கடுமையாகி உள்ளது.

எனவே. 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்துள்ள பெருநகர சென்னை மாநகரின் அனைத்து பகுதி மக்களுக்கும் மாநகராட்சியால் வழங்கப்படும் சாலைகள், ஆற்றல்மிகு தெரு விளக்குகள், மழைநீர் வடிகால்கள். திடக்கழிவு மேலாண்மை மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் சேவைகள் முழுமையான வகையிலும், மேலும் திறம்பட்ட முறையிலும் வழங்கப்படுவதற்கு ஏதுவாக பெருநகர சென்னை மாநகராட்சியின் தற்போதைய மண்டலங்களின் நிருவாகப் பகுதிகளை சீரமைத்து மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து, 20-ஆக உயர்த்தி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தினம், தினம் ஷுட்டிங் நடத்துகிறீர்கள்... முதலமைச்சர் மீது பாயும் அண்ணாமலை...!