அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் சிலர் மதுபோதையில் பேருந்து இயக்கியதால் விபத்துகள் ஏற்பட்டு பல உயிர்கள் பறிபோய் உள்ளன. அதுமட்டுமல்லாமல் சில ஓட்டுனர்கள் இவ்வாறு பேருந்தை இயக்குவதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறுகிறது. இது தொடர்பாக எழுந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. என்னவென்றால் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மது போதையில் இருக்கிறார்களா என்பதை கண்டறியும் சோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் பெரும்பாலான ஓட்டுநர், நடத்துநர் கவனத்துடன் பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கி பயணியரின் நன்மதிப்பையும் பெற்று வருவதாக கூறினர். ஆனால், ஒரு சிலர் மது போதையில் பணிக்கு வர முயற்சிப்பதால், போக்குவரத்து கழகங்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது என்றும் குறிப்பாக, இரவு நேரங்களில் சில ஊழியர்கள் மது போதையில் இருப்பதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டனர்.
இதையும் படிங்க: 7 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை..! வானிலை மையத்தின் புது அப்டேட்..!

இது பயணியர் பாதுகாப்பு பிரச்சனை என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு, 1.79 கோடி ரூபாய் செலவில், ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவை மதிப்பிடும் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

இந்தக் கருவியில், சோதனைக்கு உட்படுத்தப்படும் ஓட்டுநர் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் காகித வடிவில் பெற முடியும் என்று தெரிவித்த அதிகாரிகள், இக்கருவியை பயன்படுத்தி, தினமும் பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநர்களிடம் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறினர். மது குடித்திருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த திடீர் சோதனை வாயிலாக, பயணியர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, மதுவால் ஏற்படும் விபத்து முற்றிலும் தவிர்க்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நாளை மறுநாள் நடைபெறவிருந்த ஆண்டுத் தேர்வு ஒத்திவைப்பு... காரணம் இது தான்..!