உச்ச நீதிமன்றம் 'சூப்பர் நாடாளுமன்றம்' போல் செயல்படுவதாக விமர்சித்து குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கருத்து தெரிவித்திருந்தார். இக்கருத்து திமுக கூட்டணி கட்சிகள் எதிர்வினையாற்றி உள்ளன. இதுதொடர்பாக எம்.பி.யும் திமுக துனை பொதுச்செயலாளருமான திருச்சி சிவா கூறுகையில், "ஆளுநர்கள், குடியரசுத் தலைவர்களின் பங்கு என்ன என்பது குறித்து உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 142ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவு படுத்தியுள்ளது.

அதில் அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவியுள்ளது. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை.
இதையும் படிங்க: வக்ஃபு வன்முறையை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை... ஆய்வுக்கு செல்லும் ஆளுநர்: மம்தா அரசுக்கு மாபெரும் சிக்கல்..?

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில்," அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை தமிழகமே இன்று வன்மையாகக் கண்டிக்கின்றது, எச்சரிக்கிறது. நீதிமன்றத்தை அச்சுறுத்தும் அவரது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று விமர்சனம் செய்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறுகையில், " தமிழக ஆளுநரின் சட்ட விரோத செயல்களுக்கு, குடியரசுத் தலைவர் மவுன சாட்சியாக இருந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் குடியரசுத் தலைவரின் அரசியல் சாசன கடமைகளை நினைவூட்டி, அவைகளை நிறைவேற்ற கால வரம்பு நிர்ணயித்திருப்பது அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அரணாகவே அமைந்திருக்கிறது என்பதை குடியரசுத் துணைத் தலைவர் பிடிவாதமாக நிராகரித்து விட்டு, உச்ச நீதிமன்றத்துக்கும், நீதித்துறைக்கும் எதிராகப் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல்... ஃபைலை தூசி தட்டிய ஆளுநர்: திமுக அரசு தீவிரம்..!