பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்தே திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி 'கொத்தடிமை எடுத்த கொள்கை முடிவு'' என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அதில், ''சில நாட்களாக நிதானம் இல்லாமல் இருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரது நடவடிக்கைகள் மர்மமாக இருந்தன. அதை விட அவரது பேச்சுகளும், எதையோ மறைக்கச் செய்யும் செயல்களாகவும் இருந்தன. பா.ஜ.க. தலைமை தன்னை மிரட்டுவதை மறைக்கவே இப்படி எல்லாம் நாடகம் ஆடி இருக்கிறார் பழனிசாமி என்பதை உறுதி செய்து விட்டார் அமித்ஷா.

பா.ஜ.க. எந்த இரைக்காக காத்திருந்ததோ அந்த இரையாக ஆகிவிட்டார் பழனிசாமி. அவருக்கு வேறு வழியில்லை. அவரது சிக்கல்களை அவரே நன்கு அறிவார். பொதுச் செயலாளர் நாற்காலியில் பழனிசாமி அமர வைக்கப்பட்டாலும், அவர் அனைவராலும் ஏற்கப்பட்ட பொதுச்செயலாளர் அல்ல. அவருக்கு எதிரான ஒரு கூட்டம் அவரைச் சுற்றிலுமே இருந்து கொண்டு இருக்கிறது. பழனிசாமியின் நாற்காலியில் உட்கார அவரைச் சுற்றி இருக்கும் நான்கைந்து பேரே திட்டமிட்டுக் காத்திருக்கிறார்கள். இதில் இரண்டு பேரை பா.ஜ.க. தலைமையே ஊக்கம் கொடுத்து வளர்த்தும் வருகிறது. இது பழனிசாமிக்கு இருக்கும் முதல் சிக்கல்.

இதையும் படிங்க: அவமானப்படுத்திய இபிஎஸ்... அப்செட்டில் ஆர்.பி.உதயகுமார்... சல்லி சல்லியாய் நொறுங்கும் அதிமுக...!
தொடக்கத்தில் இருந்தே சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகிய அணிகளால் நிராகரிக்கப்பட்டவர் பழனிசாமி. முதலில் பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியவரே சசிகலாதான். சசிகலா காலை நோக்கி ஊர்ந்து போய் தொட்டு வணங்கினார் பழனிசாமி. அவரே, ‘நீ எனக்கு பதவி வாங்கி கொடுத்தியா? நீ ஏன் அ.தி.மு.க.வுக்கு உரிமை கொண்டாடுற?’ என்று சசிகலாவை ஒருமையில் பொதுக்கூட்டத்தில் பேசினார் பழனிசாமி. கப்பம் கட்டுவதில் தேர்ந்தவர் என்பதால்தான் பழனிசாமிக்கு அந்தப் பதவியையே கொடுத்தார் சசிகலா. மோதல் ஏற்படுவது என்பது வேறு, ஆனால் சசிகலாவையே நீ யார் என்று கேட்கும் அளவுக்கு துரோகியாக மாறினார் பழனிசாமி.

தினகரனுக்காக வாக்குச் சேகரித்தவர்தான் பழனிசாமி. அதன்பிறகு தினகரனை உதாசீனப்படுத்தினார் பழனிசாமி. தன்னை வலிமைப் படுத்திக் கொள்வதற்காக பன்னீர்செல்வத்தை முதலில் சேர்த்துக் கொண்ட பழனிசாமி, அதன்பிறகு அவரையும் தூக்கி எறிந்தார். இவர்கள் அனைவரும், பா.ஜ.க. பக்கமாக இருந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று சசிகலாவும் சொல்கிறார். அ.தி.மு.க. என் வசம் இருக்கிறது என்று பன்னீர்செல்வமும் சொல்கிறார். இவை அனைத்தும் இரட்டை இலை சின்னத்துக்கு சிக்கல் ஏற்படுத்துகிறது. அ.தி.மு.க.வை தன் வசம் வைத்திருந்தாலும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்ற சிக்கல் பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. இது இரண்டாவது சிக்கல் ஆகும்.
சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் பா.ஜ.க.வின் கஸ்டடியில்தான் இருக்கிறார்கள். இவர்களை அ.தி.மு.க.வுக்குள் சேர்க்கச் சொல்லி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கிறது பா.ஜ.க. தலைமை. ‘இவர்கள் கட்சிக்குள் வந்தால் தனது தலைமை கேள்விக்குறியாகும்’ என்று பயந்து போயிருக்கிறார் பழனிசாமி. இது அவருக்கு ஏற்பட்டுள்ள மூன்றாவது சிக்கல்.

பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்தால் அ.தி.மு.க.வுக்கு இருக்கும் வாக்குகள் கூட விழாது என்பதை அறியாதவர் அல்ல பழனிசாமி. நாடாளுமன்றத் தேர்தலின் போதே டெல்லி சென்று பிரதமர் மோடி அருகில் நின்று கூட்டணியை உறுதி செய்து வந்த பழனிசாமி, தேர்தல் நெருக்கத்தில் பா.ஜ.க.வை கழற்றி விட்டார். எனவே, பழனிசாமியை பா.ஜ.க. தலைமை நம்பத் தயாராக இல்லை. கடிவாளம் போட்டு கட்டிப் போடத் திட்டமிட்டு - தனது வழக்கமான ரெய்டு பாணியைக் கையில் எடுத்தது பா.ஜ.க..
கடந்த ஜனவரி மாதம் ரெய்டு அஸ்திரத்தை பா.ஜ.க. எடுத்தது. பழனிசாமியின் உறவினர்களுக்குச் சொந்தமான 26 இடங்களில் ரெய்டு நடந்தது. ‘எடப்பாடிக்கு செக் - உறவினர் வீட்டில் தொடரும் ஐ.டி. ரெய்டு’, ‘எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் ஐந்தாவது நாளாக வருமான வரித்துறை ரெய்டு’, ‘எடப்பாடி உறவினர் வீட்டில் இறங்கிய ஐ.டி. அதிகாரிகள்’, ‘எடப்பாடி உறவினர் வீட்டில் விடிய விடிய ரெய்டு’, ‘கூட்டணிக்கு குறி வைக்கப்படுகிறாரா எடப்பாடி?’, ‘வசமாக சிக்கிய எடப்பாடி பழனிசாமியின் உறவினர்’, ‘எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் சிக்கியது என்ன?’, ‘750 கோடி வரி ஏய்ப்பு செய்த எடப்பாடியின் உறவினர்’, ‘உறவினரின் வரி ஏய்ப்பு - எடப்பாடிக்கு சிக்கல்’, என்று ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டன. ‘முதலுக்கே மோசம் வந்துவிட்டது’ பழனிசாமிக்கு. இதுதான் அவரை பா.ஜ.க.வை நோக்கி பணிய வைத்துள்ளது.

‘இந்த ரெய்டுகள் அனைத்தும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கான பா.ஜ.க.வின் அழுத்தங்கள் ஆகும்’ என்று அனைத்து ஊடகங்களும் எழுதியது. ரெய்டு நடந்த காலக்கட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றம் நடந்து கொண்டிருந்தது. அப்போது சட்டமன்றத்துக்கு வராமல் வீட்டில் முடங்கிக் கிடந்தார் பழனிசாமி. இதில் இருந்து தப்புவதற்காகத்தான் பா.ஜ.க.வின் மடியில் தஞ்சம் அடைய வேண்டிய நெருக்கடி பழனிசாமிக்கு வந்தது. மிகப்பெரிய பிரச்சினை என்பது இதுதான்.
தனது தலைமைக்கும் பிரச்சினை. தனது இருப்புக்கும் பிரச்சினை. இரட்டை இலைக்கும் பிரச்சினை. தனது குடும்பத்துக்கும் பிரச்சினை. தனது சொத்துக்கும் பிரச்சினை. பாவம் பழனிசாமி என்ன செய்வார். கொத்தடிமையாய் இருக்க, கோடிக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களை அடமானம் வைத்துவிட்டார். அதனைத்தான் அறிவிக்க வந்தார் அமித்ஷா.

‘கூட்டணிக்கும் கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்க’ என்பது பழனிசாமியின் அரியவகை அரசியல் தத்துவம் ஆகும். அதற்கு அவரே சாட்சியாகவும் ஆகிவிட்டது. சொன்னது போல நடப்பதுதான் அவரது வழக்கம்'' எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இனி எதிர்பாராத ட்விஸ்டுதான்.. மாதாமாதம் கட்சிகள் வந்து அதிமுக கூட்டணியில் சேரும்.. மாஜி அமைச்சர் கணிப்பு.!