உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் கண்டோலியில் உள்ள நந்தலால்பூர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். இவர் அதே பகுதியில் அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி குஞ்சன். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக சந்தீப்புக்கும் அவரது மனைவி குஞ்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. கணவனுக்கு மனைவி மீதும், மனைவிக்கு கணவன் மீது முழுமையான நம்பிக்கை இல்லை என கூறப்படுகிறது.

சந்தீப் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாக குஞ்சனும், மனைவி குஞ்சனுக்கு திருமணம் மீறிய உறவு இருப்பதாக சந்தீப்பும் சந்தேகித்துள்ளனர். இதன் காரணமாகவே இருவருக்கு இடையிலும் ஒரு புரிதல் இன்றி இருந்துள்ளது. குஞ்சன் உடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத சந்தீப் விவகாரத்து கோரி வழக்கறிஞர் ஒருவரை அனுகியதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கணவன் மனைவி ஒட்டுதல் இன்றி, புரிதல் இன்றி வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: பூனைக்காக அக்கப்போரா? - உயிரையே விட்ட பெண்!!

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மதியம், சௌமீன் எனப்படும் நூடில்ஸை மனைவி குஞ்சனுக்காக சந்தீப் வாங்கி வந்துள்ளார். ஆனால் குஞ்சன் அதை சாப்பிட மறுத்துள்ளார். இருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக கணவன் சந்தீப்பிடம் மனைவி குஞ்சன் முகம் கொடுத்து பேசுவது கிடையாது. ஆசை ஆசையாய் வாங்கி வந்த நூடுல்ஸை குஞ்சன் சாப்பிட மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. முதலில் சந்தீப்தான் தனது மனைவி குஞ்சனை தாக்கத் தொடங்கி உள்ளார். மனைவி குஞ்சனுன், பதிலுக்கு சந்தீப்பை கன்னத்தில் அரைத்துள்ளார்.

இப்படியே இருவருக்கும் இடையிலான சண்டை அதிகமாகவே, தன்னிலை மறந்த சந்தீப், ஆத்திரமடைந்து, மனைவி குஞ்சனின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதனால் குஞ்சன் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. குஞ்சனை எழுப்பி பார்த்த சந்தீப், அவர் எழாததால் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் தனது மகன்களை கூப்பிட்டு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொன்னார். அங்கே குஞ்சனை சோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மகன்கள் தனது மனைவி குஞ்சனை மருத்துவனை அழைத்து சென்றதும், சந்தீப் நேராக அருகில் இருந்த போலீஸ் ஸ்டேசன் சென்றார். மனைவியை கொன்றதாக கூறி போலீசில் சரணடைந்தார். குஞ்சன் இறந்துவிட்டதாக மருத்துவர்களும் அறிவித்தது போலீசார் விசாரணையில் உறுதி படுத்தப்பட்டது. அதன் பின் சந்தீப்பை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். நூடுல்ஸ் சாப்பிட மறுத்த மனைவியை கணவனே கழுத்தை நெறித்து கொலை செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இப்படியுமா நடக்கும்...விட்டா போதும்டா சாமின்னு ஓடிய மணமகன்கள்!!