×
 

தொடரும் துப்பாக்கி சப்தம்.. எல்லையில் மீண்டும் வெடித்தது மோதல்.. பந்திபோராவில் பரபரப்பு..!

பஹல்காம் சம்பவத்திற்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் அபாயம் உள்ள நிலையில், பந்திப்போராவில் இருநாட்டு வீரர்களுக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்கிழமை பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 26 பேர் இறந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ட் ஃபோர்ஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்று உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற அதிரடியாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1ம் தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்து விடுவதை இந்தியா நிறுத்தி உள்ளது.பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தருவதை நிறுத்தும்வரை இந்தியா தண்ணீர் தராது என்றும் அறிவித்துள்ளது.

இந்தியாவின் அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து இன்று பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷரீஃப் தலைமையில் அந்நாட்டின் தேசிய  பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தியாவைப்போலவே பாகிஸ்தானும் சில முடிவுகளை எடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இருநாட்டு எல்லையிலும் இருநாட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் அபாயம் தொடர்கிறது. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமாக அனைவருக்கும் கற்பனைக்கு எட்டாத அளவில் தண்டனை காத்திருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்தியா எப்போது தாக்கினாலும் உடனடியாக பதில் தாக்குதல் நடத்த தயாராக இருக்க வேண்டும் என  பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷரீஃப் அந்நாட்டு இராணுவத்தினருக்கு உத்தரவு இட்டுள்ளார்.

இதையும் படிங்க: 2000ம் ஆண்டிலிருந்து.. காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் என்ன..? ஒரு பார்வை..!

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு படையினா் சோதனையை பலப்படுத்தியுள்ளனா். கடந்த புதன்கிழமை தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள தங்மாா்க் பகுதியில் நடைபெற்ற சோதனையின்போது பாதுகாப்பு படை வீரா் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.

பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி நாலா பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையின்போது 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா். வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் பசந்த்கா் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடா்ந்து அங்கு காஷ்மீா் காவல் துறையுடன் இணைந்து ராணுவத்தின் ஒயிட் நைட் காா்ப்ஸ் படை பிரிவும் சோதனையில் ஈடுபட்டது. 

அப்போது பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணமடைந்ததாக ஒயிட் நைட் காா்ப்ஸ் தெரிவித்தது. வீரமரணமடைந்த ஹவில்தாா் ஜன்து அலி ஷேக்கின் துணிவும் அவரது தியாகமும் எப்போதும் நினைவுகூரப்படும் எனவும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் ஒயிட் நைட் காா்ப்ஸ் தெரிவித்தது.

இந்த நிலையில், பந்திபோரா மாவட்டத்தின் குல்னார் பாசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை காலை பந்திபோராவின் கோல்னார் அஜாஸ் பகுதியில் இந்திய ராணுவமும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையும் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். தேடுதல் நடவடிக்கை மோதலாக மாறியது. இந்த சம்பவத்தில் இதுவரை யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதையும் படிங்க: காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி.. டெல்லி, மும்பை, உள்பட முக்கிய நகரங்கள் ஹை அலர்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share