×
 

விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சனை..! உடனடி தீர்வு காண ஓ.பி.எஸ் வலியுறுத்தல்..!

விசைத்தறி உரிமையாளர்களின் கூலி உயர்வு பிரச்சனைக்கு தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் துறையாகவும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கும் துறையாகவும், மத்திய மாநில அரசுகளுக்கு வருவாய் ஈட்டித் தரும் துறையாகவும் ஜவுளித் துறை விளங்கி வருகிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார். இதன் முதுகெலும்பாக செயல்படுபவர்கள் விசைத்தறி உரிமையாளர்கள் எனவும் கூறியுள்ளார். 

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ள விசைத்தறி உரிமையாளர்கள், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் ஊதிய உயர்வு குறித்து எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை என கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார். 

இதையும் படிங்க: எத்தனை தேர்தல் வந்தாலும் மோடி தான் பிரதமர்... இஃப்தார் விழாவில் ஓபிஎஸ் புகழாரம்!!

கடந்த மூன்று ஆண்டுகளில் மின் கட்டண உயர்வு, வாடகை உயர்வு, உதிரிபாகங்கள் உயர்வு என செலவினங்கள் அதிகரித்து விட்டதால், செலவுக்கேற்ப தங்கள் ஊதியம் உயர்த்தப்பட வேண்டுமென்றும், 1991 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் அவர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.

 

ஆனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வர மறுப்பதாக விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு, ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அவர்கள் உத்தேசித்துள்ளதாக கூறியுள்ளார்.

விசைத்தறித் தொழிலில் நேரடியாக நான்கு லட்சம் பேரும் மறைமுகமாக மூன்று லட்சம் பேரும் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி தொடங்கும்பட்சத்தில் ஒரு நாளைக்கு 35 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக கூறிய ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தையும், ஜவுளி உற்பத்தியாளர்களையும் அழைத்துப் பேசி விசைத்தறியாளர்களின் கூலி உயர்வு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கண்டு, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: முறையாக தகவல் சொல்ல அரசுக்கு என்ன தயக்கம்? TNPSC குரூப் 4 விவகாரத்தை கையில் எடுத்த அன்புமணி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share