×
 

“கனடாவை அமெரிக்காவுடன் இணைச்சிருங்க”: ஜஸ்டின் பதவி விலகியவுடன் சேட்டையைத் தொடங்கிய டிரம்ப்..

கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகளாக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய அறிவிப்பு வந்த சில மணிநேரங்களில் கனடாவை அமெரிக்காவோடு இணைத்துவிடுங்கள் என்று அமெரிக்காவின் அடுத்த அதிபரான டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு சுதந்திரா கட்சியை ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வந்த ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராகப் பதவி ஏற்றார். உலக அரசியலில் இளம் தலைவராகவும், வெளிப்படையான குடியேற்றக் கொள்கை, மனித உரிமைகளுக்கு அதிக மதிப்பளிப்பது, செல்வந்தர்களுக்கு அதிக வரி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திட்டம் ஆகியவற்றால் உலகளவில் ட்ரூடோ பிரபலமானார்.
ஆனால், ட்ரூடோ ஆட்சியில் ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்தன அதை எதிர்கொள்ள முடியாமல் அவரின் ஆட்சி பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தன. அது மட்டுமல்லாமல் கனடாவில் பணவீக்கம் அதிகரித்து மக்களின் அன்றாட வாழ்க்கை செலவினம் கடுமையாக உயர்ந்தது. இது ட்ரூடோ ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் வலுக்கச் செய்தது.


பிரதமர் ட்ரூடோ சார்ந்திருக்கும் கட்சிக்குள்ளே அவருக்கு எதிர்ப்புகள் உருவாகின. கியூபெக், ஒன்டோரியோ, அட்லாண்டிக் மாகாணங்களைச் சேர்ந்த எம்பிக்கள் ட்ரோடோவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி அவரை பதவி விலக கோரினர். கனடாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளிலும் ட்ரோடோவுக்கான ஆதரவு மக்கள் மத்தியிலும், அரசியல் மத்தியில் வெகுவாகக் குறைந்துவிட்டது தெரியவந்தது. கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே பிரதமர் ட்ரோடோவிட சிறந்த பிரதமர் தேர்வாக மக்கள் கருத்துக்கணிப்பில் தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் கனடா பிரதமர் பதவியிலிருந்து தான் விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ நேற்று அறிவித்தார். புதிய பிரதமர் அறிவிப்பு வரும்வரை பிரதமராக தொடர்வேன் என ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
ஆனால், அவரின் இந்த அறிவிப்பு வந்த சில மணிநேரங்களில் காத்துக்கொண்டிருந்த அமெரிக்காவின் அடுத்த அதிபர் ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைத்துவிடலாம் என்று தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின அடுத்த அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ர்ம்புக்கும், ஜஸ்டின் ட்ரோடோவுக்கும் இடையே கடந்த காலங்களில் சிறந்த நட்புறவு இருந்ததில்லை. குறிப்பாக 2017-21 வரை இருவருக்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல்கள் எழுந்திருந்தன.
கனடா பிரதமரையம், மக்களையும் சீண்டும் வகையில் வாய்ப்புக்காக காத்திருந்த டிரம்ப், கனடாவை அமெரிக்காவோடு இணைத்துவிடுங்கள் எனத் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதால் படு பாதாளத்துக்குப் போன செல்வாக்கு...!! ஜஸ்டின் ட்ருடோ பதவி விலகியதின் பின்னணி....


அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் “ கனடாவில் உள்ள ஏராளமான மக்கள் அதை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைக்க விரும்புகிறார்கள். அமெரிக்கா நீண்டகாலமாக வர்த்தகப் பற்றாக்குறையில் இருக்கவும் முடியாது, கனடாவுக்குத் தேவையான மானியங்களையும் வழங்க முடியாது. இது ஜஸ்டினுக்குத் தெரியும், அவரும் பதவி  விலகிவிட்டார்.
கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைத்தால், எந்த வரியும் இல்லை, வரிவிதிப்பு குறையும், ரஷ்யா மற்றும் சீன கப்பல்கள் அச்சுறுத்தல்களில் இருந்து முற்றிலும் பாதுகாப்புக் கிடைக்கும். மிகச்சிறந்த தேசமாக மாறும்” எனத் தெரிவித்தார்.
கனடாவில் இருந்து சட்டவிரோதமாக வரும் போதைப்பொருட்கள், சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரிவிதிக்கப்படும் என ட்ரம்ப் ஏற்கெனவே மிரட்டல் விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீர் ராஜினாமா...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share