5 லட்சம் அகதிகளின் குடியுரிமை ரத்து.. அதிபர் ட்ரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை..!
வென்சுலா, கியூபா, நிகரகுவா மற்றும் ஹெய்தி நாடுகளில் இருந்து அடைக்கலமாக வந்து குடியுரிமை பெற்ற 5 லட்சம் பேரின் குடியுரிமையை அதிபர் ட்ரம்ப் ரத்து செய்த உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் 2வது முறையாக பதவி ஏற்றபின் குடியேற்ற விதிகளில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். முறையான குடியேற்ற ஆவணங்கள் இல்லாதவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வருகிறார்கள், சட்டப்பூர்வமாக குடியேறியவர்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
குடியேற்ற விதிகளை கடுமையாக்கிய அதிபர் ட்ரம்ப் கடந்த மார்ச் மாதத்தில் கியூபா, ஹெய்தி, நிகரகுவா, வெனிசுலா நாடுகளைச் சேர்ந்த 5 லட்சம் பேரின் பரோல் திட்டத்தை ரத்து செய்து அவர்களை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஹார்வார்ட் பல்கலை.க்கு 230 கோடி டாலர் உதவி நிறுத்தம்.. கோரிக்கையை ஏற்காததால் அதிபர் ட்ரம்ப் ஆத்திரம்..!
இந்த பரோல் திட்டம் என்பது 2022 அக்டோபரில் முன்னாள் அதிபர் ஜோ பிடனால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பரோல் திட்டத்துக்குள் வரும் 4 நாடுகளைச் சேர்ந்தவர்கள் 2 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கலாம், மாதத்துக்கு 30ஆயிரம் பேர் வரை வரலாம் என்ற ஐ.நா.வின் ஒப்பந்தத்தின்படி, மனித நேய உதவியோடு செய்யப்படுகிறது.
அதிபர் ட்ரம்ப் உத்தரவின்படி பரோல் திட்டத்தில் இருப்பவர்களுக்கான காலக்கெடு ஏப்ரல் 24ம் தேதியோடு முடிகிறது. அதன்பின் அவர்கள் சட்டப்பூர்வ பாதுகாப்பை இழந்து சொந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டும். இந்த உத்தரவை எதிர்த்து பாஸ்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் விசாரணை நடத்தி, அதிபர் ட்ரம்ப் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
பாஸ்டன் மாவட்ட நீதிபதி இந்திரா தல்வானி பிறப்பித்த உத்தரவில் “அதிபர் ட்ரம்ப் லத்தின் அமெரிக்கர்களைக் குறிவைத்து கூட்டமாக மக்களை வெளியேற்றுகிறார். கியூபா, ஹெய்தி, நிகரகுவா, வெனிசுலா மக்கள் தொடர்ந்து அமெரிக்காவில் தங்கலாம். அதிபர் ட்ரம்பின் குடியுரிமை ரத்து உத்தரவுக்கு தடை விதிக்கிறேன். குடியேற்றச் சட்டத்தின் தவறான விளக்கத்தின் அடிப்படையில் டிரம்ப் நிர்வாகம் செயல்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: யார் இந்த ஸ்டீபன் மிரன்..? அதிபர் ட்ரம்ப் வரிவிதிப்பின் சூத்திரதாரி பொருளாதார வல்லுநர்..?