சிறுமி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளது கர்நாடக நீதிமன்றம். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள சம்மனையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளதால் கர்நாடகா அரசியலில் புதிய பரபரப்பு தொற்றிக் கொண்டது.
மார்ச் 14, 2025 அன்று கர்நாடக உயர் நீதிமன்றம், முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு ஒரு முக்கியமான நிவாரணம் அளித்தது. மார்ச் 15 அன்று பெங்களூருவின் முதல் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சம்மனை நிறுத்தி வைத்து எடியூரப்பாவுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

நீதிபதி பிரதீப் சிங் யெரூர் வழங்கிய இந்த உத்தரவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (POCSO) சட்டத்தின் கீழ் எடியூரப்பாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தை ரத்து செய்யக் கோரிய மனுவை நீதிமன்றம் ஆய்வு செய்தது. வழக்கை கீழமை நீதிமன்றம் பரிசீலிப்பதையும் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதையும் படிங்க: நண்பர்கள் சேர்ந்து சிதைத்த கொடூரம்... அவதிப்பட்ட சிறுமிகள்... வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
இந்த வழக்கு தொடர்பாக முழுமையான விசாரணை தேவை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பிப்ரவரி 2, 2024 அன்று முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா வீட்டில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அப்போது, 17 வயது சிறுமியும் அவரது தாயும், தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு உதவி கோரி எடியூரப்பாவின் இல்லத்திற்கு சென்றனர்.

ஜூன் 27, 2024 அன்று குற்றப் புலனாய்வுத் துறை (CID) சமர்ப்பித்த குற்ற பத்திரிக்கையில், எடியூரப்பா சிறுமியை ஒரு அறையில் பூட்டி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது. பின்னர் விஷயத்தை மூடி மறைக்க ரூ.2 லட்சம் கொடுத்ததாகவும், பாதிக்கப்பட்டவரின் தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து தொடர்புடைய ஊடகங்களை நீக்கியதாகவும் கூறப்படுகிறது.
POCSO குற்றச்சாட்டுகளுடன், பாலியல் துன்புறுத்தல், ஆதாரங்களை அழித்தல் மற்றும் லஞ்சம் ஆகியவற்றிற்காக இந்திய தண்டனைச் சட்ட (IPC) பிரிவுகளின் கீழும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எடியூரப்பாவின் வழக்கறிஞர் சி.வி. நாகேஷ், சம்பவத்தின் போது இருந்த சாட்சிகள் எந்த தவறும் நடக்கவில்லை என்று மறுத்ததாகவும், புகார் தாக்கல் செய்ய ஒரு மாத தாமதம் ஏற்பட்டதையும் வாதிட்டார். FIR-ல் உள்ள IT தொடர்பான குற்றச்சாட்டுகள் புகாரளித்தவருக்கு பொருந்தும், எடியூரப்பாவுக்கு அல்ல என்றும், அவர் ஆதாரங்களை மாற்றவில்லை என்றும் கூறினார்.

மாறாக, அரசு வழக்கறிஞர் சஷிகிரண் ஷெட்டி, முந்தைய நீதிமன்ற உத்தரவுகள் எடியூரப்பாவை ஆஜராவதில் இருந்து மட்டுமே விலக்கு அளித்ததாகவும், விசாரணையை நிறுத்தவில்லை என்றும் கூறி நிவாரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
மூத்த பாஜக தலைவரான எடியூரப்பா, இந்த குற்றச்சாட்டுகளை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று நிராகரித்தார். அந்தப் பெண்ணுக்கு இறக்கப்பட்டு உதவி வழங்கியதாகவும், துயரத்தில் உள்ள அந்த தாய்-மகளுக்கு உதவ காவல்துறையை தொடர்பு கொண்டதாகவும் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் தாய் மே 2024 அன்று இறந்துவிட்ட நிலையில், முரண்பட்ட சாட்சியங்களை சார்ந்து இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: பாலியல் நோக்கமின்றி சிறுமியின் உதட்டை பிதுக்குதல் ‘போக்ஸோ’ குற்றமாகாது... டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு..!