திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நவாப்பாளையம் ஊராட்சி மிருகண்டா நதி அணை அருகே செங்கல் சூளைக்கு மண் கடத்தப்படுவதாக ஆதமங்கலம் புதூர் காவல் நிலையத்துக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் பேரில் உதவி காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட, மணல் கடத்தும் கும்பல், மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களில் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றனர். மண் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்ற நபர்களும் தப்பியோடி தலைமறைவாகினர்.
இறுதியாக 3 டிராக்டர்கள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரம் மட்டுமே போலீசாரிடம் சிக்கின. இதனை, காவலர்கள் உதவியுடன் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லும் பணியில் நாகராஜன் ஈடுபட்டார்.

2 டிராக்டர்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஒரு டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திர வாகனத்தை, அதே கிராமத்தில் வசிக்கும் வழக்கறிஞர் குமரன் என்பவர் இரு சக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தி வழி மறித்தார். மேலும் கோயில் திருவிழாவுக்கு மண் கொண்டு செல்லப்படுவதாக கூறி போலீசாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருப்பினும், அனுமதியின்றி மண் கடத்தப்பட்டுள்ளதாக கூறிய போலீசார், இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்திவிட்டு டிராக்டர், பொக்லைன் இயந்திரத்தை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்ல முயன்றார்.
இதையும் படிங்க: போதை ஊசி போட மறுத்த இளைஞர் கொலை.. ஓ போட்டது போதும் ஸ்டாலின்.. விளாசும் இபிஎஸ்..!

அப்போது வக்கீல் குமரன், தவி காவல் ஆய்வாளர் நாகராஜன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர்களை, சமாதானப் படுத்தும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் காக்கி சீருடையை பிடித்து இழுத்து, உதவி ஆய்வாளரை வழக்கறிஞர் குமரன் தாக்கியுள்ளார். இதையறிந்த ஆதமங்கலம்புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று வழக்கறிஞர் குமரனை பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.


இதுகுறித்து ஆதமங்கலம் புதூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வழக்கறிஞர் குமரனை (வயது 45) கைது செய்தனர். மேலும், மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 டிராக்டர் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் தாக்குதலில் காயமடைந்து, ஆதமங்கலம் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளர் நாகராஜனிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
இதற்கிடையில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் குமரன் கூறியதால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை போலீசார் அனுமதித்தனர். கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் குமரன் என்பவர், காவல் ஆய்வாளர் நந்தினியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கூட்டணியை உறுதி செய்த கையோடு எடப்பாடி பழனிசாமி வீட்டில் கைநனைக்கும் அமித்ஷா..!