காஷ்மீர் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது..! பியூஷ் கோயல் உறுதி..!
ஜம்மு-காஷ்மீரில் விரைவில் மீண்டும் சுற்றுலா துவங்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் கடந்த 22-ம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயங்குகிறது. பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இருந்ததாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலத்த கண்டனத்தை தெரிவித்து உள்ளன. இஸ்ரேல், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்பதாக உறுதிஅளித்துள்ளன.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இருநாட்டு எல்லையிலும் இருநாட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் அபாயம் தொடர்கிறது. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமாக அனைவருக்கும் கற்பனைக்கு எட்டாத அளவில் தண்டனை காத்திருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்தியா எப்போது தாக்கினாலும் உடனடியாக பதில் தாக்குதல் நடத்த தயாராக இருக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷரீஃப் அந்நாட்டு இராணுவத்தினருக்கு உத்தரவு இட்டுள்ளார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் பதட்டம் நிலவும் ஜம்மு-காஷ்மீரில் விரைவில் மீண்டும் சுற்றுலா துவங்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தான் சதி.. காஷ்மீரில் கணவனை இழந்த பெண் கண்ணீர்..!
அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடக்கும். காஷ்மீர் அடைந்து வரும் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. பாகிஸ்தானியர்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என நாங்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டோம். பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத நாடுகளுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ள இந்தியாவுக்கு எந்த விருப்பமும் இல்லை.
இந்தியாவில் எந்த இடத்திலும் பயங்கரவாதம் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்.140 கோடி இந்தியர்களும் தேசியம், தேசபக்தியை தங்களின் உயர்ந்த கடமையாக நினைக்கும்வரை, இது போன்ற தொந்தரவுகள் வந்து கொண்டுதான் இருக்கும். எல்லை தாண்டிய, அரசு ஆதரவுடன் நடக்கும் பயங்கரவாதம் என்பது நாகரீக சமூகத்துக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும் என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறினார். அது இப்போது என் நினைவுக்கு வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களை தண்டிக்க, தக்க பதிலடி கொடுக்க ஒட்டுமொத்த நாடும் ஒன்று சேர்ந்து கோபத்தை வெளிப்படுத்த வேண்டும். இதுதான் அதற்கான நேரம். பயங்கரவாதிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் கண்டுபிடித்து நாங்கள் தண்டிப்போம். இதில் ஒவ்வொரு இந்தியரும் உறுதியாக இருக்கிறோம். மும்பை தாக்குதல் சம்பவத்தை எதிர்கொண்டு வலிமையுடன் மீண்டு வந்தோம்.
அதே போல புல்வாமா தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுத்தோம்.நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக கார்கில் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். இந்த துக்ககரமான சம்பவத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம். தாக்குதலில் இறந்தவர்களுக்காக பிரார்த்திக்கிறோம். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய விரும்புவதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
இதையும் படிங்க: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை.. காஷ்மீர் விரைந்தது NIA.. உச்சக்கட்ட பரபரப்பு..!