100-வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தனது 100-வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது.
உலக நாடுகளுடன் வானியல் துறையில் இந்தியா இன்று குறிப்பிடத்தக்க முறையில் போட்டியிடுகிறது என்றால் அதற்கு கடந்த 70 ஆண்டுகளாக அயராது பாடுபட்டு வரும் பெயரறியா ஒவ்வொரு விஞ்ஞானியின் உழைப்பும் பின்னால் உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி இந்தியா தனது முதலாவது ராக்கெட்டான SLV-3E1 என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 1980-ம் ஆண்டு ஜுலை மாதம் 18-ந் தேதி விண்ணில் ஏவப்பட்ட ரோகிணி என்ற செயற்கைக் கோளை ஏந்திச் சென்ற SLV-3E2 என்ற ராக்கெட்டே முதல் வெற்றிகரமான ஏவுதலாக அமைந்தது.
இதன்பின்னர் PSLV ( Polar Satellite Launch Vehicle) வகை ராக்கெட்டுக்களை இந்தியா வடிவமைத்தது. உலகின் வெற்றிகரமான வணிகரீதியான ராக்கெட் என்று பெயரெடுக்கும் அளவுக்கு பிஎஸ்எல்வி இன்று வளர்ந்துள்ளது. இதன்பிறகு GSLV (Geosynchronous Satellite Launch Vehicle) எனும் அதிநவீன ராக்கெட்டுக்களை நோக்கி முன்னேறியது இஸ்ரோ. இதுவரை இஸ்ரோ 62 முறை பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுக்களையும், 16 முறை ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுக்களையும் விண்ணில் ஏவி உள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரோவின் 100-வது ராக்கெட் தயார்! ஜிஎஸ்எல்வி F-15 ராக்கெட் 29ம் தேதி விண்ணில் பாய்கிறது
அந்தவகையில் இன்றைய தினம் (29/01/2025) இஸ்ரோ தனது 100-வது ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. GSLV F15 என்ற ராக்கெட்டானது NVS-02 என்ற செயற்கைக் கோளை ஏந்தி இன்று காலை 6.23 மணிக்கு விண்ணில் பறந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து GSLV F15 தீப்பிழம்புகளை வெளியேற்றயபடி பறந்து திட்டமிடப்பட்ட நேரத்திற்குள் NVS-02 செயற்கைக் கோளை புவி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. இந்த NVS-02 செயற்கைக் கோளானது, பிற செயற்கைக் கோள்களுடன் இணைந்து தரை, வான்வழி, கடல் ஆகியவற்றின் போக்குவரத்துகளுக்கு உதவும். கூடவே, பேரிடர் காலங்களில் துல்லியமாக தகவலை பெற இந்த செயற்கைக் கோள் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரோவின் தலைவராக தமிழரான நாராயணன் பொறுப்பேற்றப் பின்னர் நடத்தப்பட்ட முதலாவது ராக்கெட் ஏவுதல் இதுவாகும். அந்தவகையில் இது கூடுதல் சிறப்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இஸ்ரோவின் புதிய மைல்கல்... செயற்கைக் கோள்களை DOCKING செய்து சாதனை...