×
 

மாற்றப்படுகிறார் கே.சி.வேணுகோபால்?- வருகிறார் இளந்தலைவர் சச்சின் பைலட்..

காங்கிரஸ் கட்சியின் தெளிவில்லாத முடிவுக்கும், தெரிந்தே தோல்வியை தழுவியதற்கும் முழு காரணமாக கருதி கே.சி.வேணுகோபாலை நீக்கவும் அடுத்து வடமாநிலத்திலிருந்து இளம் தலைவரான சச்சின் பைலட்டை பொதுச் செயலாளராக ஆக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்.

காங்கிரஸ் பேரியக்கம் அதன் சுய தன்மையை இழந்து மீள முடியாமல் 15 ஆண்டாக மத்தியில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாமல் துடைத்தெரியப்பட்டுள்ளது. வெற்றி வாய்ப்புக்கான வாய்ப்புகள் கையில் வந்தபோதெல்லாம் அதை தட்டி பறித்து தனக்கு தானே குழி பறித்துக்கொண்டது காங்கிரஸ். 
இதற்கு முழு காரணம் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் என்று சொல்லலாம். டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உ.பி என காங்கிரஸ் கோளோச்சிய பல மாநிலங்கள் இன்று காங்கிரஸ் கையில் இல்லை. இதில் உ.பி., மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பிஹார் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரஸ் வலுவாக இருந்து பின்னுக்கு தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணம் காங்கிரஸின் மூத்த தலைவர்கள், காங்கிரஸ் உள்ளிருந்த வலதுசாரி தலைவர்கள் கட்சி மாறியது எனலாம். 

இன்னும் பலர் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் ஆதிக்கம் காரணமாக தாம் வளர முடியாது என பாஜக பக்கம் தாவியதால் காங்கிரஸ் இன்றளவும் தடுமாறி வருகிறது. காங்கிரஸ் கட்சி எடுத்தேன் கவிழ்த்தேன் என எடுக்கும் முடிவுகளால் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் சமீபத்தில் ஆட்சியை பாஜக, ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்தது. 

இதையும் படிங்க: ரூ.500க்கு சிலிண்டர், 300 யூனிட் மின்சாரம் இலவசம்: டெல்லியில் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி..

ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் கூட்டணி கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் பெரியண்ணன் மனோ பாவத்துடன் காங்கிரஸ் நடந்து கொண்டதால் குறைந்த சதவீதத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது. பஞ்சாபில் தேவையில்லாமல் கேப்டர் ஹம்ரீந்தர்  சிங்கை நீக்கி சம்பந்தமில்லாமல் சித்துவை தலைவராக்கி கேப்டனை பாஜக பக்கம் துரத்தினர். விளைவு ஆட்சியை ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்து 3 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது காங்கிரஸ். 

கெலாட், சச்சின் பைலட் விவகாரத்தில் பைலட் பாஜக பக்கம் தாவ இருந்த சச்சின் பைலட் கடைசி நேர முயற்சியில் மனம் மாறினார். இல்லாவிட்டால் சிந்தியா குடும்பம் போல் மொத்தமும் பாஜக பக்கம் போயிருக்கும். அப்படிப்பட்ட சச்சின் பைலட் இன்றளவும் மனத்தாங்கலில் தான் இருக்கிறார். அதன் பின்னர் நடந்த பல தேர்தல்களில் காங்கிரஸ் தவறான முடிவெடுப்பதற்கு அதன் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலின் தன்னிச்சையான செயல்பாடே காரணம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி அவரை பதவியில் நீடிக்க விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல் 2024 மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்து 10ல் 5 தொகுதிகளை கைப்பற்றிய வெற்றிக் கூட்டணியை உடைத்து, அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில்  ஆம் ஆத்மியை வெளியேற்றி 0.84 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் ஹரியானாவில் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பாஜகவிடம் பறிகொடுத்தது. இதற்கு முழுக்க முழுக்க கே.சி.வேணுகோபால் தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிடம் வலியுறுத்தி வந்தார். தனக்கு வேண்டியவர்களுக்கும், ஆதாயம் உள்ளவர்களுக்கும் தொகுதிகளை ஒதுக்கியதும், 4% வாக்கு வைத்திருந்த வெற்றி கூட்டணியிலிருந்த ஆம் ஆத்மியை வெளியில் விரட்டியதுமே தோல்விக்கு காரணம் என்று காங்கிரஸ் கட்சிக்குள் வாதம் வைக்கப்பட்டது. 

இந்தியா கூட்டணியை காங்கிரஸே மதிக்காமல் பல மாநிலங்களில் கட்சிகளை வெளியேற்றும் போக்குக்கு கே.சி.வேணுகோபாலின் தவறான புரிதலே காரணம் என்றும் ஆம் ஆத்மியை ஹரியானாவில் வெளியேற்றியதால் டெல்லியில் கூட்டணி அமைக்க முடியாமல் காங்கிரஸ் முற்றிலும் துடைத்தெறியப்பட கே.சி.வேணுகோபாலே காரணமாக அமைந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்படும் சமீபத்திய குற்றச்சாட்டு. 

காங்கிரஸின் மாநில தலைவர்களை மதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும், பண ஆதாயம், பெண் விவகாரம் என பல குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்படுகிறது. சமீபத்தில் வயநாடு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை அவர் அவமானப்படுத்தும் விதத்தில் நடத்தியதும் அவர் மேடை விட்டு இறங்கி சென்றதும் அவர் எந்த அளவுக்கு தாந்தோன்றி தனத்துடன் நடந்துக்கொள்கிறார் என்பதன் ஒரு உதாரணம் என்கின்றனர் காங்கிரசார். 

காங்கிரஸ் கட்சிக்குள் இள ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். 7 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றிய கே.சி.வேணுகோபால் கட்சியை மேலும் அதள பாதாளத்திற்கு கொண்டுச் சென்றது தான் மிச்சம். கட்சியின் அகில இந்திய தலைவர்கள் இருவரும் தென் மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருப்பதும் கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தாது என்பதால் இந்தி பேசும் மாநிலத்திலிருந்து அதுவும் செல்வாக்கான ஒரு இளந்தலைவரான சச்சின் பைலட்டை பொதுச் செயலாளராக்க காங்கிரஸ் தலைவர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 

மத்திய பிரதேசத்தில் மாதவராவ் சிந்தியாவின் குடும்பமே பாஜக பக்கம் தாவியதால் அங்கு காங்கிரஸுக்கு இழப்பு, இதேப்போல் ராஜஸ்தானிலும் கெலாட் போன்றவர்கள் செயல்பாட்டால் சச்சின் பைலட் பாஜகவுக்கு போவார் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது அவர் காங்கிரஸிலேயே இருந்து தனது விசுவாசத்தை நிரூபித்தார். 

அதற்கு பரிசளிக்கும் விதமாகவும், முக்கியமான இந்தி பேசும் மாநிலத்திலிருந்து ஒரு இளந்தலைவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக வரும் பட்சத்தில் இளம் ரத்தம் பாய்ச்சப்படும் என காங்கிரஸ் தலைமை நினைக்கிறது.ஆகவே சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவது உறுதி என்கின்றனர் காங்கிரசார். 

அவருக்கு தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும் ஆதரவு என்பதால் விரைவில் மாற்றம் வரும் என்கின்றனர். காங்கிரஸ் கட்சியில் ராகுல் பிரியங்கா உள்ளிட்டோர் தவிர இளந்தலைவர்கள் அதிகம் பொறுப்புகளில் இல்லை என்பதை சச்சின்பைலட் வரவு தகர்க்கும் என்கின்றனர். காலம் அதற்கு விடை கூறும் பார்ப்போம்.

இதையும் படிங்க: ரூ.500க்கு சிலிண்டர், 300 யூனிட் இலவச மின்சாரம்.. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தாராளம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share