2வது முறையாக நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை.. என்ன முடிவுகள் எடுக்கப்படலாம்?
2வது முறையாக பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவை நாளை காலை பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது.
காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்த பின் 2வது முறையாக பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவை நாளை காலை பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது. காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் கடந்த 22ம் தேதி நடந்த பின் 23ம் தேதி பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவை கூடி முக்கிய ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக்குப் பின்புதான் பாகிஸ்தானுடன் வர்த்தக உறவு, தூதரக உறவு துண்டிப்பு, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, விசா ரத்து, பாகிஸ்தானியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுவது உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிலையில் 2வது முறையாக நாளை பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவை கூடுவதால், ஏதேனும் முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுக்கலாம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்கள், பாதுகாப்பு வீரர்கள் தயார்நிலை குறித்து ஆலோசிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவி்க்கின்றன.
இதையும் படிங்க: உளறிக் கொட்டிய கவாஜா.. ஐ.நா சபையில் வச்சு செஞ்ச இந்தியா.. அனல் பறக்கும் பேச்சு..!
பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்த பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்கள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.
பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டமும் நடக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 23ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவது, உஷார் நிலையில் பாதுகாப்பு வீரர்களை முக்கிய இடங்களில் வைத்திருப்பது, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையும், நீதியின் முன் நிறுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: தேச துரோகிகள்! பயங்கரவாத தாக்குதலுக்கு உதவிய வஞ்சகர்கள்.. பெயர், விவரங்கள் அறிவிப்பு..!