பஹல்காம் தாக்குதல்.. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்.. உமர் அப்துல்லா அறிவிப்பு..!
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிர் இழந்தோரின் குடும்பத்தற்கு எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் ஈடாகாது என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்தும் வரை ஓயமாட்டோம் என்றும் கூறினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு முன்பாக அவர்களின் மதம் குறித்து கேட்டு பின்னர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குஜராத், கர்நாடகா உள்பட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியாவிற்கு அரசு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, தாக்குதல் குறித்து கேள்விப்பட்டதும் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இந்தியா திரும்பியுள்ளார்.
நேற்று காஷ்மீர் விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், இன்று தாக்குதல் நடைபெற்ற பகல்ஹாம் பகுதிக்கு ஹெலிகாப்டரில் சென்ற அமித்ஷா, அப்பகுதியை பார்வையிட்டார். மேலும், இந்த தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து ராணுவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, சிஆர்பிஎஃப் டிஜி, ஜம்மு காஷ்மீர் டிஜி, ராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். உயிரிழந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு ஸ்ரீநகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களுக்கு அமித் ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, மாநில முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: காஷ்மீர் தாக்குதலில் தமிழர்களின் நிலை? நொடிக்கு நொடி பகீர்.. லைவ் அட்டேட்..!
இதையடுத்து, அங்கு கூடி இருந்த உயிரிழந்தவர்களின் உறவினர்களை அமித் ஷா சந்தித்தார். அவர்கள் கதறி அழுதபடி அமித் ஷாவிடம் முறையிட்டனர். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அமித் ஷா, இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் யாரும் தப்பிக்க முடியாது என்றும் கூறினார். இதற்கிடையே, பயங்கரவாத தாக்குதலில் பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். இது குறித்து உமர் அப்துல்லா கூறியிருப்பதாவது:
பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. பயங்கரவாதத்தை எந்த ரூபத்திலும் ஏற்க முடியாது. எவ்வகை இழப்பீட்டாலும் உயிரிழந்தோரின் உயிருக்கு ஈடுகட்ட முடியாது. சொந்தங்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனினும், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு சிறிய வகையிலான உறுதுணையாக இருக்கும் என்ற வகையில், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.
படுகாயம் அடைந்தோருக்கு, 2 லட்சமும், லேசான காயங்களுடன் தப்பியோருக்கு 1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எந்த வகையிலும் ஏற்க முடியாது. தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தும் வரை ஓயமாட்டோம் என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒருத்தனும் தப்பிக்க கூடாது..! இந்தியாவின் பதிலடி அப்படி இருக்கணும்..! ஆவேசமான மோடி..!