எழும்பூர் - புதுச்சேரி இடையே மீண்டும் மெமு விரைவு ரயில் சேவை.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை எழும்பூர் - புதுச்சேரி இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரயில் நாளை முதல் சனிக்கிழமைகளில் வழக்கம்போல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்கள் இயக்கம் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக சென்னை எழும்பூர் - புதுச்சேரி இடையே தினந்தோறும் காலை 6.35 மணிக்கு இயக்கப்பட்டு வந்த மெமு விரைவு ரயில் இனி சனிக்கிழமைகளில் இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வே கடந்த 3-ம் தேதி அறிவித்திருந்தது.
இதேபோன்று மறுமார்க்கத்தில் புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு அன்றாடம் பிற்பகல் 3 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலும் சனிக்கிழமைகளில் இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், திருப்பதி - புதுச்சேரி இடையே தினந்தோறும் அதிகாலை 4 மணிக்கு இயக்கப்பட்டு வந்த மெமு விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் இனி இயக்கப்படாது என்றும்,
மறுமார்க்கத்தில் புதுச்சேரி - திருப்பதி இடையே அன்றாடம் மாலை 4 மணியளவில் இயக்கப்படும் விரைவு ரயிலும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்திருந்தது.
இதையும் படிங்க: ரயிலில் தொடரும் செல்போன் பறிப்பு.. அதிரடி காட்டிய ரயில்வே போலீசார்..!
மறுஅறிவிப்பு வரும்வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னை எழும்பூர் - புதுச்சேரி, புதுச்சேரி- சென்னை எழும்பூர் இடையேயான ரயில் சேவை நாளை முதல் சனிக்கிழமையிலும் வழக்கம்போல் இருக்கும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.
இதுபோன்று, ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டிருந்த திருப்பதி, - புதுச்சேரி, புதுச்சேரி- திருப்பதி மெமு விரைவு ரயில்களும் நாளை மறுநாள் முதல் ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்.. செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் வழித்தடத்தில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!