தண்டவாளங்களை கடக்கும் யானைகள்.. இனி நோ ACCIDENT.. புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்..!
தண்டவாளங்களில் யானைகள் வருவதனை அறியும் வகையில் ஏஐ கேமராக்கள் பொருத்தப்பட்டு நூதன முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அமல்படுத்த உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவையில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் போத்தனூர், வாளையார் ஆகிய பகுதிகள் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிக்குள் ஏ, பி என இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ‘ ரயில் பாதை 1.78 கி.மீ. தூரமும், ‘பி‘ ரயில் பாதை 2.8 கி.மீ தூரமும் கொண்டவை. கடந்த 20 ஆண்டுகளில் 35 காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. இதனை தடுக்க பாலக்காடு ரயில்வே கோட்டமும், வனத்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
காட்டு யானைகள் அதிக நடமாட்டம் உள்ள பி ரயில் பாதையில் வாளையாறு - எட்டிமடை இடையே இரண்டு இடங்களில் காட்டு யானைகள் கடந்து செல்வதற்காக சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வனத்துறை சார்பில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் காட்டு யானைகள் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்டறிந்து எச்சரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காயமடைந்த சிறுவனை டோலி கட்டி தூக்கி சென்ற கிராம மக்கள்.. 5கி.மீ காட்டுப்பாதையில் நடந்த அவலம்..
யானைகள் ரயில் தண்டவாளங்களுக்கு அருகே வரும் போது, கட்டுப்பாட்டு அறை மூலம் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கும், வனத் துறையினருக்கும், லோகோ பைலட்டிற்கும் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் தண்டவாளத்தில் யானைகள் நடமாடுவது குறித்து, ‘டிஜிட்டல் அறிவிப்பு பலகை ’ மூலம் ரயில்களை இயக்கும் லோகோ பைலட்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது.
யானைகள் நடமாட்டத்தை அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஏஐ கேமரா மூலம் கண்காணித்து, யானைகள் ரயில் தண்டவாள பகுதிக்கு வரும் போது மட்டும், எல்.இ.டி. திரையில் சிவப்பு நிறத்தில் யானையின் உருவம் தெரியும் வகையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் லோகோ பைலட்கள் நேரடியாக உடனுக்குடன் யானைகள் நடமாட்டத்தை அறிந்து, ரயிலின் வேகத்தை குறைத்து விபத்து ஏற்படுவதை தவிர்க்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் மூலம் கடந்த ஓராண்டில் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் யானைகள் நடமாட்டம் குறித்து 5,011 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லால்குடி அன்பில் மாரியம்மன் கோயில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு