பதுங்கி இருந்து தாக்க முயற்சி.. வளர்ப்பு நாயால் உயிர் பிழைத்த மகன்..!
கோவை அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை சிறுவனை தாக்க முயன்ற நிலையில் வளர்ப்பு நாயால் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ளது. இவை கேரளா வனப்பகுதி ஒட்டி அமைந்துள்ளதால் இந்த பகுதியில் எப்பொழுதும் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அவ்வப்போது புலி, சிறுத்தைகளின் நடமாட்டமும் காணப்படும். இந்நிலையில், வால்பாறை அருகே சிறுவனை தாக்க பதுங்கியிருந்த சிறுத்தையை வளர்ப்பு நாய் காட்டி கொடுத்ததால் சிறுவன் ஒருவர் உயிர் தப்பியுள்ளார். தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
வால்பாறை அருகே உள்ள ரொட்டிக்கடை உயர்நிலைப் பள்ளிக்கு மேற்புறம் குடியிருந்து வருபவர் சிவக்குமார் சத்யா தம்பதி. இவர்களது மகன் நேற்று (ஏப்ரல் 7) மாலை 5 மணியளவில் வீட்டின் முன்புறம் உள்ள பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, வீட்டின் அருகே சிறுத்தை ஒன்று சிறுவனை தாக்குவதற்காக பதுங்கியிருந்தது. இதனைக் கண்ட அவர்களது வளர்ப்பு நாய் சிறுத்தையை பார்த்து பலத்த சத்ததுடன் குரைத்தது.
இதையும் படிங்க: சாலையை கடக்கும் போது ஒரு லுக்.. சிறுத்தையின் கம்பீர போஸ்.. கதிகலங்கிய பயணிகள்..!
இதனால், சிறுவனை ஆக்ரோஷத்துடன் பாய்ந்து தாக்க வந்த சிறுத்தை, நாயின் குரைக்கும் சத்தம் கேட்டு திரும்பி சென்றுள்ளது. இதனிடையே சிறுவன் சிறுத்தையை பார்த்து தனது தாயிடம் தெரிவிக்கிறார். இந்த காட்சிகள் வீட்டின் வெளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். குழந்தைகளை தனியாக வீட்டிற்கு வெளியே அனுப்ப வேண்டாம், அவர்களை கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: வீட்டுக்குள் நுழைந்து.. வெளியேற முடியாமல் சிக்கி தவித்த புலி.. லாபகரமாக எஸ்கேப்- ஆனா பெண்..