ஆருத்ரா தரிசனத்திற்கு தயாராகும் சிவாலயங்கள். தில்லை நடராஜர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
தமிழ் சைவ மரபில் சிவன், முழுமுதற் கடவுளாக பார்க்கப்படுகிறார்.
இலக்கியத்தில் அதிகம் பாடப்பட்ட இறைவனாக மிளிர்வது சிவபெருமான் தான். அவருக்கு எடுக்கப்படும் விழாக்களில் முக்கியமானது ஆருத்ரா தரிசனம் ஆகும். சிவனுக்கு உகந்த நட்சத்திரமான திருவாதிரை, மார்கழி மாத பௌர்ணமியோடு இணைந்து வரும் நாளில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனம் வருகிற 12-ந் தேதி காலை 11.24-க்கு பிறந்து 13-ந் தேதி காலை 10.38 வரை நீடிக்கிறது. இதற்கான கொடியேற்றங்கள் சிவாலயங்களில் இன்று தொடங்கியது.
சிவன் என்றதும் நினைவுக்கு வருவது தில்லை என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் ஆலயம் தான். ஆடல் வல்லானின் அற்புதங்கள் நிகழ்ந்த தலமான தில்லையில் இன்று காலை 6.15 மணியளவில் சிவாச்சாரியர்களின் மந்திர முழக்கத்துடன் கொடியேற்றம் நடந்தேறியது. ஆலய வளாகத்திற்குள் சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் பஞ்சமூர்த்தி தரிசனமும், சுவாமி புறப்பாடும் நடைபெறும். 12-ந் தேதி திருத்தேரோட்டமும், 13-ந் தேதி காலை மகா அபிஷேகமும், பிற்பகல் 2 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறும். இன்றைய கொடியேற்றத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் அருளைப் பெற்றனர்.
இதையும் படிங்க: கோடீஸ்வர சாமியை பார்க்க.. 5 கிலோ நகை அணிந்து வந்த நபர் .. வியந்து பார்த்த பக்தர்கள் ..!
அப்படியென்ன சிறப்பு ஆருத்ரா தரிசனத்தில் என்றால்? ஆயிரமாயிரம் உண்டு. புராண கதைகளின் படி தாருகா வனத்தில் சிவபெருமானை நோக்கி தவமிருக்க, பிச்சைக்காரன் வேடமிட்டு வந்தார் ஈசன். முனிவர்களை காணாதது போல் ஈசன் செல்ல, சினம் கொண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மதயானை உள்ளிட்ட விலங்குகளை வரவழைத்து சிவபெருமான் மீதே ஏவினர். அவற்றை வதம்செய்து வலது காலை ஊன்றி, இடதுகாலை உயர்த்தி காட்சி தந்தார். இதுவே ஆருத்ரா தரிசனத்தின் கதையாகும்.
தில்லையைப் போன்றே திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலிலும், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதஸ்வாமி கோயிலிலும் இன்றைய தினம் ஆருத்ரா தரிசனத்திற்கான கொடியேற்றம் நிகழ்ந்தேறியது. ஆருத்ரா நாளன்று திருவாரூர் தியாகராஜர் சன்னதியில் வடபாத தரிசனம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும்.
பெண்கள் திருவெம்பாவை பாடி 10 நாட்கள் விரதம் இருப்பது திருவாதிரையின் விசேஷங்களில் ஒன்று.
அதேபோன்று திருவாதிரை என்றதும் நினைவுக்கு வருவது அதன் படையலான களி ஆகும். உளுந்து மாவில் இனிப்பு கலந்து செய்யப்படும் களி பிரசித்தி பெற்ற ஒன்றாகும். திருவாதிரைக்கு ஒரு நெய்க்களி என்ற பழமொழியே இதன் சுவையை எடுத்துச் செல்லும்.
இதையும் படிங்க: நெல்லையப்பர் திருக்கோயிலில் திருவாதிரை திருவிழா ..மெய்சிலிர்க்க வைத்த கொடியேற்றம் ..!