"தமிழக அரசுடன் மோதல்: உடனே தீர்வு காணுங்கள்...இல்லையேல்..." கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை...
தமிழக அரசு கவர்னர் மோதலுக்கு உடனடியாக தீர்வு காண விட்டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டியது இருக்குமம் என்று, உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய அரசியல் சட்டத்தைப் பொறுத்தவரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கும் மாநில முதல் அமைச்சர்களுக்கும்தான் உண்மையான அதிகாரம் உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமலில் இருந்த ஜனாதிபதி மற்றும் மாநில கவர்னர் பதவி நாட்டு விடுதலைக்கு பின் அலங்கார பதவியாகவே நீடித்து வருகிறது. வெறும் 'ரப்பர் ஸ்டாம்ப்' 'பொம்மை பதவி' என்றும் இதை விமர்சிப்பது உண்டு.
ஆனால், சில மாநில கவர்னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் பலமுறை நடந்துள்ளன.
இதையும் படிங்க: சனாதனத்தின் வழிகாட்டி திருவள்ளுவர்.... ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடுத்த சர்ச்சை..
தற்போது கவர்னராக பதவி வகிக்கும் ஆர் என் ரவி தொடக்கத்தில் இருந்தே தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இது குறித்து தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம், "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சிக்கு தான் உண்மையான அதிகாரம்" என்று சொல்லி, பலமுறை கவர்னருக்கு 'குட்டு' வைத்து இருக்கிறது.
இருப்பினும் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக கவர்னராக நியமிக்கப்பட்ட ரவி, தமிழக அரசுடன் மோதல் போக்கை கைவிடவில்லை. இந்தி மொழி, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் அதற்கு மாறாக, தமிழக அரசுக்கு எதிர்மறை கருத்துக்களை கவர்னர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.
தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் கவர்னர் உரையை சட்டசபையில் வாசிக்காமல் அவற்றில் சில பகுதிகளை நீக்கியும், சேர்த்தும் அவர் படித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். அவை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் இடையிலேயே வெளியேறியும் இருக்கிறார்.
பொதுவாக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் நிறைவாக தேசிய கீதமும் பாடப்பட்டு வருவது வழக்கம். ஆனால் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்பதை கவர்னர் ரவி வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சட்டசபையில் நிறைவேற்றப்படும் முக்கிய மசோதாக்கள் மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான ஒப்புதல் வழங்காதது உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக கவர்னர் ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
துணைவேந்தர்கள் நியமனம் , தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களின் நியமிக்கும் விவகாரம் தொடர்பாகவும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெ.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோரை கொண்ட அமர்வில் இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்கில் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் (அட்டார்னி ஜெனரல்) ஆர். வெங்கடரமணி வாதிடும்போது, "கவர்னாருக்கு எதிரான வழக்குகளை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், "கவர்னருக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு விவகாரங்களில் தீர்வு காணப்பட்டு உள்ளதா ? அல்லது பழைய நிலைதான் இன்னும் தொடர்கிறதா?" என்ற கேள்வியை எழுப்பினார்கள்.
அதைத்தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள், பி. வில்சன், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் எழுந்து "ஆளுநருக்கு தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது கூட துணை வேந்தர்கள் நியமனத்தில் பிரச்சினை எழுந்துள்ளது. தமிழக அரசின் அனைத்து அதிகாரங்களிலும் கவர்னர் தலையிடுகிறார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகும் அவருடைய போக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான கூடுதல் மனுவையும் இந்த வழக்குடன் சேர்த்து விசாரித்து கவர்னர் தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும்" என்று வாதாடினார்கள்.
அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "தமிழக அரசின் இந்த கூடுதல் மனுவுக்கு தனியாக நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்க வேண்டியது இல்லை. இந்த வழக்கோடு சேர்த்து இதையும் விசாரிக்கப்படும். மேலும் கவனருக்கும் தமிழக அரசுக்கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்தில் உடனடியாக நீங்களே ஒரு சுமூக தீர்வுக்கு வர வேண்டும்..; இல்லை என்றால் நாங்களே அதில் தலையிட்டு தீர்வு காண வேண்டியது இருக்கும்.." என்றும் மறைமுக எச்சரிக்கை விடுத்தனர்.
பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், "அன்றைய தினம் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடைபெறும்" என்று திட்டவட்டமாக அறிவித்தனர்.
இதற்கையில் தமிழக அரசுடன் கவர்னர் மோதல் போக்கை கடைபிடித்து வருவது குறித்த வழக்கு ஒன்றுஏற்கனவே அப்போதைய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திர சூட் முன்பு விசாரணைக்கு வந்திருந்தது.
அப்போது, "நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தமிழக முதல் அமைச்சருக்கும் கவர்னருக்கும் இடையேயான பிரச்சனையில் ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டுமென கவர்னர் எதிர்பார்ப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இருவருக்கும் பரஸ்பர சுமுகமான உறவு இருந்தால் தான் எந்த ஒரு பிரச்சினைக்குமே தீர்வு கிடைக்கும். கவர்னர் தரப்பில் இருந்து இந்த விவகாரத்தில் சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கிறோம். முதலமைச்சரும் கவர்னரும் நேரில் சந்தித்து பேசி இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்று அறிவுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து கவர்னரை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் தயாராக இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கவர்னரும் தன்னை சந்தித்து பேசும்படி முதல்வருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் துறைமுகம் உள்ளிட்ட அமைச்சர்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ரவியை சந்தித்து பேசியது நினைவு கூரத்தக்கது.
இந்த சூழலில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார நிகழ்வு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பல்கலைக்கழக துணை வேந்தர் நியமன பிரச்சினை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: “ஆளுநருக்கு எச்சரிக்கை... அண்ணாமலைக்கு நன்றி”... தனது பாணியில் பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்!