மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். இதை அடுத்து அவர் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி, பாஜக புதிய மாநிலத் தலைவர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒருபுறம் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மறுபுறம் சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமித்ஷா, மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது.
தேசிய அளவில் நரேந்திர மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் கூட்டணி செயல்படுகிறது. 1998ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி இணைந்து 30 தொகுதிகளில் வென்றது.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணியால் எந்த பயனும் ஏற்படாது... குண்டை தூக்கிப்போட்ட மூத்த பத்திரிகையாளர்!!

அதன்பின் மீண்டும் இயல்பாக அமைந்துள்ள கூட்டணி இது. இந்த கூட்டணிக்காக அதிமுக தரப்பில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. அதிமுக - பாஜக என்பது உறுதியான கூட்டணியாகும். இதில் எந்த குழப்பமும் கிடையாது. 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் என்றார். இந்த நிலையில் பாஜக - அதிமுக கூட்டணி அழுத்தம், நெருக்கடியின் அடிப்படையில்தான் ஏற்பட்டுள்ளதாக திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக - பாஜக கூட்டணிதான் அமையும் என்பது ஏற்கனவே எல்லோரும் யூகித்த ஒன்றுதான். அது இன்று நிறைவேறி இருக்கிறது. விஜய் போன்ற புதிய அரசியல் கட்சி மற்றும் மற்ற அமைப்புகளுடன் இணைந்து அதிமுக கூட்டணி அமைக்கக் கூடாது என்பதில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மிக கவனமாக இருந்தது. இன்று ஒரு அழுத்தம், நெருக்கடியின் அடிப்படையில்தான் அதிமுக - பாஜகவுடன் இணையும் நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடி முன்பிருக்கும் 2 ஆப்ஷன்... அமித் ஷா போட்ட கன்டிஷன்... ஏற்குமா அதிமுக?