உலக நாடுகளிடைய ஏற்பட்டிருக்கும் பதற்றம் மற்றும் பொருளாதார நிலையற்றத் தன்மை காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அதிரடியாக உயர்ந்து வரும் தங்கத்தின் விலை, தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில், 22 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 9 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 70 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.

அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 8 ஆயிரத்து 945 ரூபாய்க்கும் சவரன் 71 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஒருபக்கம் அமெரிக்க - சீன வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்க டாலர் மதிப்புக் குறைய வாய்ப்புள்ளதால் இந்தியா, தங்கக் கையிருப்பை மேலும் அதிகரிப்பது குறித்து திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இது குழந்தையை நீரில் வீசுவது போன்றது.. ரிசர்வ் வங்கிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொந்தளித்த வைகோ!!

மறுபுறம் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் 11 ஆயிரத்து 986 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 6 லட்சத்து 88 ஆயிரத்து 496 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாகவும் ஏஎன்ஐ செய்தி தெரிவித்துள்ளது. தங்கக் கையிருப்பின் மதிப்பு அதிகரிப்பு கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து நடந்து வருகிறது.

அதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் ஆர்பிஐ கையிருப்பில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்காகியிருப்பதாகவும், இதனுடன், மத்திய ரிசர்வ் வங்கி, தங்கக் கையிருப்பை அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் நிலவும் பல்வேறு அபாயங்கள் காரணமாக, இந்தியா, வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருந்த தங்கக் கையிருப்பை சொந்த நாட்டுக்கு மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்டிஏ கூட்டணியிலேயே நாங்க தான் மாஸ்... காலரைத் தூக்கி விடும் ஜி.கே.வாசன்...!