ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது பளு தூக்கும் வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா. கடந்த ஆண்டு கோவாவில் நடந்த தேசிய பெஞ்ச் பிரஸ் சாம்பியன்ஷிப்பில் சப்-ஜூனியர் 84 கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவில் கலந்து கொண்ட யாஷ்டிகா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். பொதுவாக பவர் லிஃப்டிங் எனப்படும் வலு தூக்குதலில் 3 விதமான பயிற்சிகளை வீரர் மற்றும் வீராங்கனைகள் மேற்கொள்வர். இதில் முதலாவது தோள்பட்டையில் அதிக அளவிலான பாரத்தை வைத்து கீழே உட்காந்து எழுவது போன்றது. இது ஸ்குவாட் என அழைக்கப்படும். மற்றொன்று ஒரு பெஞ்சில் படுத்துக்கொண்டு மார்புக்கு நேராக வெயிட்டை தூக்குவது. இது பெஞ்ச் ப்ரஸ் எனப்படும். 3வது விதத்தில் அதிக அளவிலான வெயிட் பொருத்திய இரும்பு ராடை தரையில் இருந்து மேலே தூக்குவது. இது டெல் லிப்ட் எனப்படும்.

இதில் அதிக எடையை தோள்பட்டையில் சுமந்து கீழே அமர்ந்து எழுந்து கொள்ளும் ஸ்கூவாட் பயிற்சியில் நேற்று யஷ்டிகா ஆச்சார்யா ஈடுபட்டிருந்தார். அவரது பயிற்சியாளரும், நண்பர்களும் அவருக்கு உதவினர். கொஞ்சம் கொஞ்சமாக எடையை அதிகரித்த யஷ்டிகா, தன்னுடைய எடையை விட 3 மடங்கிற்கும் அதிகமான எடையை தூக்க முடிவு செய்தார். மொத்தம் 270 கிலோவை கம்பியில் பொருத்தி தூக்குவது என முடிவானது. அவருக்கு பயிற்சியாளரும், நண்பர்களும் உதவினர். தயாராக இருந்த எடையை தனது தோள்பட்டையில் வைத்து இரண்டடி பின்னால் வந்த யஷ்டிகா அதனை சுமந்தபடி ஸ்குவாட் செய்ய முயன்றார். ஆனால் எதிர்பாரத விதமாக அந்த அசம்பாவிதம் நடந்தது.
இதையும் படிங்க: கண்ணா, 2 லட்டு தின்ன ஆசையா? ஆண்களுக்கு இரு மனைவி கட்டாயம்; எந்த ஊரில் தெரியுமா?

யஷ்டிகா வலுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் தூக்கிய 270 கிலோ எடையுள்ள கம்பியானது எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் பலமாக விழுந்தது. உடனிருந்த நண்பர்களும், பயிற்சியாளரும் அதிர்ச்சி அடைந்தனர். அதிக அளவிலான எடை கழுத்தில் விழுந்ததால் யஷ்டிகா மூர்ச்சையானார். பேச்சு மூச்சற்று கிடந்தார். அதிர்ச்சியில் இருந்து மீளாத அவரது பயிற்சியாளரும் , நண்பர்களும் அவருக்கு முதலுதவி அளித்தனர். ஆனாலும் யஷ்டிகா கண்ணை திறக்கவில்லை. உடனே யஷ்டிகாவை தூக்கிக்கொண்டு பயிற்சிக் கூடத்திலிருந்தோர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதிக எடையை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது கழுத்து எலும்புகள் முறிந்ததாகவும், இதன் காரணமாகவே அவர் உயிர் பிரிந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். போலீசாரும் மருத்துவமனைக்கு வந்து சம்பவம் நடந்த விதம் குறித்து அறிந்து கொண்டு அதையே தங்களது முதல்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அவருடன் இருந்த பயிற்சியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த மரணத்தில் எவ்வித சந்தேகமும் எழாத நிலையில், உயிரிழந்த யஷ்டிகா ஆச்சார்யாவின் குடும்பத்தாரும் புகார் எதுவும் தரவில்லை. இதனைத்தொடர்ந்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்தாலும் யஷ்டிகா ஆச்சார்யாவின் கழுத்தில் எடை கம்பி விழும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நெஞ்சை பிசையும் இந்த வீடியோ பார்வையாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பவர் லிஃப்டிங் சரியாக செய்யப்படாவிட்டால் மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும். காயங்களைத் தவிர்க்க சரியான ஃபார்மை உறுதி செய்ய வேண்டும். விளையாட்டு வீரர்கள் தங்கள் பயிற்சியாளருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். தனியாக வலு தூக்குவதை தவிர்த்து, உடற்பயிற்சிகளை பாதுகாப்பானதாக மாற்ற பயிற்சியாளர்கள் ஸ்பாட்டர்களாகவும் செயல்பட வேண்டும்.
இதையும் படிங்க: மொபைல் போனுக்கு அடிமையான பள்ளி மாணவி.. வீட்டில் கண்டித்ததால் தற்கொலை.. கூடவே அண்ணனும் உயிரிழந்த சோகம்..!