சிஎஸ்கேவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்.. அது அன்பின் வெளிப்பாடு.. சமாளிக்கும் அஸ்வின்.!!
ட்ரோல்களை எண்ணி கவலைப்படுவதில்லை, அது அன்பின் வெளிப்பாடு என்று சிஎஸ்கே வீரர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவி உள்ளது. குறிப்பாக சேஸ் செய்வதில் சொதப்பி வருகிறது. அதனால் சிஎஸ்கே அணியின் செயல்பாட்டை விமர்சித்து வருகின்றனர். வீரர்களும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சிஎஸ்கே மீதான விமர்சனங்கள், ட்ரோல்கள் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசி உள்ளார்.
“ட்ரோல்களை எண்ணி நான் கவலைப்படுவதில்லை. இது ஒரு வகையில் அன்பின் வெளிப்பாடுதான். அணியின் மீதோ அல்லது வீரர்கள் மீதோ வைக்கப்படுகின்ற அன்பு. வீட்டில் அப்பா, அம்மா திட்டுவது போலத்தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். உண்மையில் யாரும் தோற்க வேண்டும் என விரும்ப மாட்டார்கள். அதை கடந்து வருவது குறித்துதான் நாங்கள் பேசி வருகிறோம். சில விமர்சனங்கள் அர்த்தம் உள்ளதாக இருக்கும். சில விமர்சனங்களில் வெறும் வன்மம் மட்டுமே இருக்கும். அதை நம்மால் அடையாளம் காண முடியும்.
கடந்த 90-களில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லாமல் வெறும் கையோடு திரும்பினால் கடும் அதிருப்தி இருக்கும். கிரிக்கெட் வீரர்களின் வீடுகள் மீது கல் எறிவார்கள், கொடும்பாவிகளை கொளுத்துவார்கள். அந்தச் செயலை சரி என்று நான் சொல்லவில்லை. இப்போது அதையே சமூக வலைதளத்தில் ட்ரோல்களாக வெளிக்காட்டுகின்றனர். இதை நாம் எப்படி கடந்து செல்கிறோம் என்பதுதான் முக்கியமானது” என அஸ்வின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தினேஷ் கார்த்திக் என்னை புதிய வீரராக மாற்றி வருகிறார்... மனம் திறந்த RCB வீரர்!!
இதையும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் பெரும் சாதனை... ரோஹித் சர்மாவை ஓவர்டேக் செய்வாரா விராட் கோலி?