கில், ஸ்ரேயாஸ், அக்ஸர் அபார அரைசதம்! முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
நாக்பூரில் இன்று பகலிரவாக நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 249 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்கு நடுவரிசை பேட்டர்கள் ஸ்ரேயாஸ் அய்யர்(59), சுப்மான் கில்(87), அக்ஸர் படேல்(52) ஆகியோரின் அரைசதம் முக்கியக் காரணமாக அமைந்தது.
இதையும் படிங்க: அதான் நான் இருக்கேன்ல்ல.. இந்திய அணியில் இடம்பிடிக்க முட்டிமோதும் ஸ்ரேயாஸ் ஐயர்!
113 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாறியபோது, 4வது விக்கெட்டுக்கு சுப்மான் கில்லுடன், அக்ஸர் படேல் சேர்ந்து அமைத்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் போக்கை மாற்றியது, இருவரும் 4வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதேபோல ஸ்ரேயாஸ், சுப்மான் கில்லும் 3வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 94 ரன்கள் சேர்த்ததும் ஆட்டத்தின் போக்கைத் தீர்மானித்தது.
இந்த 3 பேரும் சேர்ந்து அமைத்த இரு பார்ட்னர்ஷிப்கள்தான் வெற்றியை எளிதாக்கியது. சாம்பியன்ஸ் டிராபி நெருங்கி வரும் நேரத்தில் நடுவரிசை பேட்டர்கள் வலுவாக பிரகாசிப்பது இந்திய அணி பலமாகும். 96 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்த சுப்மான் கில் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய பேட்டிங்கில் ஜெயிஸ்வால், ரோஹித் சர்மா கூட்டணி ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் ரோஹித் சர்மா நியூசிலாந்து, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் ஃபார்மில் இல்லை, ரஞ்சிக் கோப்பைத் தொடரிலும் சொதப்பிய நிலையில் இந்த ஒருநாள் தொடர் அவருக்கு கடைசி வாய்ப்பாகக் கூறப்பட்டிருந்தநிலையில் அதிலும் 2 ரன்னில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஜெய்ஸ்வால் 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இந்தியப் பந்துவீச்சில் ஹர்சித் ராணா, ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதிலும் ஜடேஜா 9 ஓவர்கள் வீசி ஒருமெய்டன், 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்து தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார். ஷமி 8 ஓவர்களில் ஒருமெய்டன் 38 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இந்திய அணி பந்துவீச்சைப் பொருத்தவரை ராணா, ஷமி இருவருமே சிறப்பாகப் பந்துவீசினர், தொடக்கத்தில் ராணா பந்துவீச்சை இ்ங்கிலாந்து பேட்டர்கள் அடித்தாலும் அதன்பின் கட்டுக்கோப்பாக வீசினார்.
சுழற்பந்துவீச்சுக்கு இங்கிலாந்து பேட்டர்கள் திணறுவது இந்த ஆட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஜடேஜாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜோ ரூட், பெத்தல் ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளும். ரஷித் விக்கெட்டும் வீழ்ந்தது. பவர்ப்ளே ஓவர்களில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஓரளவுக்கு ரன்கள் கொடுத்தாலும், நடுப்பகுதி ஓவர்களில் குல்தீப், அக்ஸர், ஜடேஜா ஆகியோரின் ஓவர்கள் இங்கிலாந்து ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தது.
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை பில் சால்ட், டக்கெட் இருவரும் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். அதிலும் சால்ட், தொடக்கத்திலிருந்தே ராணாவின் பந்துவீச்சை பொளந்துகட்டினார். பவர்ப்ளே ஓவர் முடிவதற்குள் பில் சால்ட் 26 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ரன்அவுட் ஆகினார். டக்கெட்டுடன் தகவல்பரிமாற்றம் சரியாக அமையாததால் சால்ட் விக்கெட்டை இழந்தார். ஒருவேளை சால்ட்ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் இங்கிலாந்து அணி பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும்.
75 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி ஆடிய இங்கிலாந்து அணி, அடுத்த 2 ரன்கள் சேர்ப்பதற்குள் சால்ட், டக்கெட், ஹேரி ப்ரூக் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. ஜோ ரூட்டும் 19 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
கேப்டன் பட்லர், ஜேக்கப் பெத்தல் இருவரும் நடுவரிசையில் விக்கெட்டை ஸ்திரப்படுத்தி, நிதானமாக பேட் செய்து இருவரும் அரைசதம்அடித்தனர். பட்லர்(52), ரன்களில் அக்ஸர் பந்துவீச்சிலும், பெத்தல்(51) ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபின், இங்கிலாந்து அணியின் கடைநிலை பேட்டர்கள் லிவிங்ஸ்டோன்(5), பிரைடன் கார்ஸ்(10), ரஷித்(8), மெஹ்மூத்(2) என சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர்.
206 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி அடுத்த 42 ரன்களில் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையும் படிங்க: இந்திய அணியில் கடும் போட்டி... சாம்பியன்ஸ் டிராபியில் யார் யாருக்கு வாய்ப்பு?