ஜுனியர் மகளிர் டி20 உலககோப்பை - இந்தியா ஹாட்ரிக் வெற்றி ஆட்ட நாயகியான திரிஷா, போராடிய ராஷ்மிகா...
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகின்றன.
லீக் சுற்று போட்டியில் நேற்று இந்தியாவும், இலங்கையும் மோதின. கோலாலம்பூரில் உள்ள பயூமாஸ் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய தரப்பில் துவக்க வீராங்கனைகளாக திரிஷாவும், கமாலினியும் களமிறங்கினர். இதில் மிகச்சிறப்பாக விளையாடிய திரிஷா 44 பந்துகளில் ஒரு சிக்சர் 5 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மிதிலா, ஜோஷிதா, நிகி ஆகியோர் தங்கள் பங்குக்கு ரன்களை சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்த இந்திய அணி 118 ரன்களை எடுத்தது.
இதையும் படிங்க: சொத்தையான சூப்பர் ஸ்டார்ஸ்! ரஞ்சிக் கோப்பையிலும் சொதப்பிய ரோஹித், கில் பந்த், ஜெய்ஸ்வால்
பின்னர் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 2-வது பந்திலேயே இலங்கை அணியின் நிஷான்சலா டக்அவுட் ஆனார். அடுத்து வந்த வீராங்கனைகள் ஒவ்வொருவரும் ஒற்றை இலக்கத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதிகபட்சமாக ராஷ்மிகா மட்டும் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணி வெறும் 58 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஜுனியர் மகளிர் டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. முன்னதாக போட்டியை நடத்தும் மலேஷியா மற்றும் வலுவான மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா வீழ்த்தி இருந்தது. இந்தியா தனது அடுத்த போட்டியில் வங்கதேசத்தை வருகிற 26-ந் தேதி சந்திக்க உள்ளது.
2023-ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜுனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணி நடப்பு சாம்பியனாக வெற்றிநடை போட்டு வருகிறது.
இதையும் படிங்க: அதிரடி அபிஷேக், சக்ரவியூகம் அமைத்த சக்ரவர்த்தி: இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த இந்திய அணி