பாரம்பரியமான கிளாசிக்கல் பிரிவில் தரவரிசைப் பட்டியலில்அ முன்னணி இடத்தைப் பிடிப்பவர்கள் சிறந்த வீரர்களாகக் கருதப்படுவார்கள். அந்த வகையில் ஃபிடே வெளியிட்டுள்ள செஸ் தரவரிசை பட்டியல் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பட்டியலில் உலக சாம்பியனான இந்தியாவின் டி. குகேஷ் 2,787 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். கிளாசிக்கல் தரவரிசையில் குகேஷ் 3ஆவது இடத்தைப் பிடிப்பது இதுவே முதல்முறையாகும்.
நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 2,833 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 2,802 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். 3ஆவது இடத்தில் நீண்ட காலமாக இருந்த இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 2 இடங்களை இழந்து 2,777 புள்ளிகளுடன் 5ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 17 புள்ளிகளைக் கூடுதலாக பெற்றார். இவர் 2,758 புள்ளிகளுடன் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மகளிர் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி 2,528 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளார். ஆர்.வைஷாலி 2,484 புள்ளிகளுடன் 14ஆவது இடத்திலும், ஹரிகா துரோணவல்லி 2,483 புள்ளிகளுடன் 16ஆவது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நாக் அவுட் சுற்றுகள்.. இப்படியா போட்டி அட்டவணை போடுவாங்க..?