2025 ஐபிஎல் சீசனில் இன்றைய ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடக்க வீரராக களமிறங்கிய பில் சால்ட் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய படிக்கல் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து 22 பந்துகளில் 37 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் விராட் கோலி, 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி அபார ஆட்டத்தால் 42 பந்துகளில் 67 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய லிவிங்ஸ்டோன் டக்அவுட் ஆனார். இதனால் ஆர்.சி.பி. அணி தடுமாற தொடங்கியது. அப்போது களமிறங்கிய கேப்டன் பட்டிதார், மும்பை அணியின் பந்துகளை தெறிக்கவிட்டார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரி என 32 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். அவருடன் சேர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜித்தேஷ் சர்மா, 19 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் ஆர்.சி.பி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி களமிறங்கி விளையாடியது.
இதையும் படிங்க: பந்துகளை தெறிக்கவிட்ட ஆர்.சி.பி. கேப்டன் பட்டிதார்... இமாலய இலக்கை எட்டுமா மும்பை இந்தியன்ஸ்?

தொடக்க வீரர்களாக வந்த ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் தொடக்கம் முதலே தடுமாறினர். ரோஹித் மற்றும் ரியான் ரிக்கெல்டன் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வில் ஜேக்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் நிதனமாக ஆடினர். இருந்தபோதிலும் ரன்களை குவிப்பதில் சிரமம் ஏற்பட்டது. வில் ஜேக்ஸ் 22 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் பெங்களூர் அணியின் பந்துகளை அடித்து விளாசினர்.

திலக் வர்மா 29 பந்துகளில் 56 ரன்களும் ஹர்திக் 15 பந்துகளில் 42 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய மிட்செல் சான்ட்னர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி இலக்கை எட்டுவதற்கு தடுமாற தொடங்கியது. பின்னர் வந்த தீபக் சாஹர் டக் அவுட் ஆகி வெளியேறினார். நமன் திர் 11 ரன்களை குவித்து அவுட் ஆனார். இறுதியாக வந்த டிரென்ட் போல்ட் 1 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: மோசமாக விளையாடும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி... நொந்துபோன காவ்யா மாறன்!!