நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகும். 1971-ம் ஆண்டின் மக்கள்தொகை அடிப்படையில் இந்த எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இடைப்பட்ட காலத்தில் மக்கள்தொகையை கட்டுப்படுத்த தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் கடுமையாக முயற்சி எடுத்து அதனை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஆனால் வடமாநிலங்கள் அவ்வாறு செய்யவில்லை.

அதனால் தொகுதி மறுவரையறை செய்யப்படும் போது வடமாநிலங்களுக்கு குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்றும் தமிழ்நாடு 8 தொகுதிகளை இழக்க நேரிடும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: போட்டோ வெளியிட்டு மானத்தை வாங்கிய தர்மேந்திர பிரதான்.. ஆடிப்போன அன்பில்..!

இதற்காக கடந்த 5-ந் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தொகுதி மறுவரையறை தொடர்பாக தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழு என ஒன்றை உருவாக்கி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கும்... தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கும் மற்றும் இந்த 7 மாநிலங்களைச் சேர்ந்த 29 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழுவில் சேர ஒப்புதல் கோரியும், அதுதொடர்பான கூட்டத்தில் பங்கேற்க பிரதிநிதிகளை அனுப்பி வைக்கக் கோரியும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த அழைப்புக் கடிதங்களை திமுக பிரதிநிதிகள் நேரில் சென்று கொடுத்து அழைக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இதன்படி நேற்று ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை, திமுக எம்.பி.தயாநிதி மாறன் மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். வருகிற 22-ந் தேதி நடக்க உள்ள கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதன்தொடர்ச்சியாக பெங்களூரில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோரை சந்திக்க தமிழக அமைச்சர் பொன்முடி, திமுக எம்.பி.அப்துல்லா ஆகியோர் நேரில் சென்றுள்ளனர். இதேபோன்று ஆந்திராவில் உள்ள அரசியல் கட்சிகளை அழைப்பதற்காக தமிழக அமைச்சர் எ.வ.வேலு, திமுக எம்.பி.வில்சன் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர்.
திமுக முன்னெடுத்துள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழு அரசியல் அரங்கில் நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்.. தலைமறைவாக இருந்த விஜயராணி கைது.. 4 மாத தேடுதல் முடிவுக்கு வந்தது..!