யூடியூப்பில் வரும் “இந்தியா காட் லேடன்ட்” எனும் நிகழ்ச்சியில் யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியா பெண்கள் குறித்து முகம் சுழிக்கும் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தமைக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன, மும்பை போலீஸிலும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து, யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியா, சமூக வலைதள இன்ப்ளூயன்சர் அபூர்வா மகிஜா, நகைச்சுவை நடிகர் சமே ரெய்னா, நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள் மீது மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ரன்வீர் அல்லாபாடியா யூடிப்பில் பிரபலமான இவருக்கு பீர்பைசெப்ஸ் என்ற பெயரும் உண்டு. சமூக வலைத்தளங்களில் கோடிகளில் சம்பாதித்து, செல்வாக்கு செலுத்துபவர்களில் முக்கிய நபராக ரன்வீர் இருந்து வருகிறார். ரன்வீர் தனது யூடிப்பில் உடற்பயிற்சி, ஆன்மீகம், உடல்நலன் குறித்த தகவல்களை பதிவிட்டு வருகிறார். இவரின் நிகர சொத்து மதிப்பு ரூ.58 கோடியாகும் சமே ரெய்னா என்பவர் தனது யூடியூப்பில் “ இந்தியாஸ் காட் லேடன்ட்” எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
நாடுமுழுதும் எண்ணற்ற இளைஞர்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை இந்த நிகழ்ச்சி வாயிலாக வெளிக்கொண்டு வந்து அவர்களின் வாழ்கைக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. ஆடல், பாடல், இசை, நகைச்சுவை, மேஜிக் உள்ளிட்ட எண்ணற்ற திறமைகளை இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்துவார்கள். இந்நிலையில் சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியா, பெண்கள் குறித்தும், பெற்றோர் குறித்தும் மிகவும் மோசமான கருத்துக்களைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இணையத்தைக் கலக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்...

அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகவே அவருக்கு கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. யூடியூப்பர் ரன்வீர் மீது மகாராஷ்டிரா மகளிர் ஆணையம் சார்பில் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் “ இந்தியாஸ் காட் லேடன்ட்” நிகழ்ச்சியில் சர்சைக்குரிய கருத்துக்கள் பேசப்பட்டன. அதைப் பேசிய ரன்வீர் அல்லாபாடியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவைக்காக பேசப்பட்டதாக கூறப்பட்டாலும், கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெண்களின் அந்தரங்கங்கள், உறுப்புகள் குறித்து வேண்டுமென்றே தவறாகப் பேசப்பட்டுள்ளது, நிகழ்ச்சியை ரசிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே நிகழ்ச்சி அமைப்பாளர்களும், பங்கேற்பாளர்களும் பேசியுள்ளனர், இதன் மூலம் அதிக நிதியையும்,புகழையும் பெற முடியும் என செய்துள்ளனர் என குற்றம்சாட்டப்படுகிறது.
யூடியூப்பர் ரன்வீர் கருத்துக்கு கடும் கண்டனங்கள், எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பொதுமன்னிப்புக் கோரியுள்ளார். அவர் தனது பதிவில் “ இந்தியாஸ் காட் லேடன்ட் நிகழ்ச்சியி்ல நான் அதுபோன்ற கருத்துக்களை நான் அப்படி பேசியிருக்கக்கூடாது, என்னை மன்னித்துவிடுங்கள். என் கருத்துக்கள் பொருத்தமற்றது மட்டுமல்ல, நகைச்சுவையாகவும் இல்லை. நகைச்சுவை என்னுடைய பலம் அல்ல. குறிப்பாக எல்லா வயதினரும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் நான் நிலைமறந்து பேசிவிட்டேன்.
குடும்பம் என்பது நான் ஒருபோதும் அவமரியாதை செய்யாத ஒரு விஷயம்.

இந்த தளத்தை சிறப்பாகப் பயன்படுத்தி இருக்க வேண்டும். இந்த அனுபவத்திலிருந்து நான் கற்றுக்கொண்டேன். அந்த வீடியோவில் இருந்து சர்ச்சைக்குரிய அந்த வார்த்தைகளை நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், என்னை நான் வருங்காலத்தில் மேம்படுத்திக்கொள்வேன் என உறுதியளிக்கிறேன். என்னை மன்னியுங்கள். நீங்கள் என்னை ஒரு மனிதராக நினைத்து மன்னிப்பீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் நிருர்களிடம் இந்த வீடியோ குறித்து கூறுகையில் “ இந்த வீடியோவில் பேசிய கருத்துக்கள் குறித்து எனக்கு தகவல் கிடைத்தது. நான் இன்னும் பார்க்கவில்லை. பேசியவார்த்தைகளும், நிகழ்ச்சியும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொருவருக்கும் பேச்சு சுதந்திரம் இருக்கிறது, ஆனால், சுதந்திரம் மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்க வேண்டும். நம்முடைய சமூகத்தில் சில விதிகள் இருக்கின்றன, அதை மீறினால் நிச்சயம் தவறுதான். விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தேசிய மகளி்ர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ரேகா சர்மா கூறுகையில் “ ரன்வீர் கருத்தைக் கேட்டதும், வீடியோவைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த கருத்தை ஆணோ அல்லது பெண்ணோ ஏற்கமாட்டார்கள், சமூகம் ஒருபோதும் ஏற்காது. தாயைப் பற்றியோ அல்லது பெண்ணின் அந்தரங்க உறுப்பு குறித்த நகைச்சுவையாகப்பேச முடியுமா. இன்றைய இளைஞர்கள் ஒழுக்க ரீதியாக இவ்வளவு கீழ்நோக்கிச் சென்றுவிட்டார்கள் என்பதைக் இந்த வீடியோ காண்பிக்கிறது.
இதுபோன்ற நகைச்சுவைகள் இதேபோன்ற படைப்பு விஷயங்களில் ஈடுபடும் மற்றவர்களைப் பாதிக்கும் என்று நான் நினைக்கிறேன். நடவடிக்கை எடுக்க அந்த வீடியோவை தேசிய மகளிர் ஆணையர் தலைவருக்கு அனுப்பியுள்ளேன்” எனத் தெரிவித்தார். சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளர் ராஜூ வாகமாரே கூறுகையில் “ யூடியூப்பர் ரன்வீர் தண்டிக்கப்பட வேண்டியவர். மகாராஷ்டிராவில் சிவாஜி ஆண்டமண்ணில் இதுபோன்ற கருத்துக்கள் ஏற்க முடியாதது. பொறுக்கமுடியாது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் பாணியில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சர்வதேச விழாவில் "நெட்பேக்" விருதை தட்டிச் சென்ற "பேட் கேர்ள்"..