மும்மொழிக் கொள்கையை ஏற்க தமிழக அரசு தயாராக இல்லை என்ற போதிலும் அதனை ஏற்று தான் ஆக வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறி வருகிறது. மொழிக் கொள்கை பிரச்சனை தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, தமிழகத்தின் கல்வித்தரத்தை குறைக்க மும்மொழி கொள்கை கொண்டு வரப்படுவதாகவும், அறிவுள்ள யாரும் மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிடிஆர்-ஐ புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றாமல் குறுக்கு வழியில் மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

1968-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை என சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும், இதுவரை எங்கேயும் அமல்படுத்த முடியவில்லை என்று தெரிவித்தார்.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஹிந்தி தெரியாது என்கிறாரே அவருக்கு ஏதேனும் பாதிப்பு வந்ததா என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.

வெற்றிகரமான கல்விமுறையை நீக்கிவிட்டு தோல்வியடைந்த கல்வி முறையை அறிவுள்ளவர்கள் ஏற்பார்களா என்றும் தமிழ்நாடு பின்பற்றிய இருமொழி கொள்கையால் சிறப்பான விளைவுகளை பெற்றுள்ளோம் எனவும் தெரிவித்தார். கல்வியின் தேசிய சராசரியை விட தமிழகத்தில் சராசரி அளவு அதிகம் இருப்பதாகவும், வடமாநிலங்களில் இரு மொழி கொள்கை அமல்படுத்தியிருந்தால் மூன்றாவது மொழி தேவைப்பட்டிருக்காது எனவும் குறிப்பிட்டார். இரு மொழி கொள்கையை கூட அமல்படுத்த முடியாதவர்கள் நம்மை மூன்றாவது மொழி கற்க சொல்வதாகவும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: இங்க திமுக ஜெயிக்க இந்த ஒன்ன மட்டும் செஞ்சே ஆகனும்... உ.பி.க்களை அதிரவிட்ட பிடிஆர்...!