அவ்வப்போது அந்த தொலைக்காட்சி நிர்வாகம் எடுக்கும் பக்க சார்பு, பட்டவர்த்தனமாக தெரிந்து விடும். அதுகுறித்து யாரும் கேள்வி கேட்டால், உடனடியாக மாற்று நிகழ்ச்சி மூலம் பதில் சொல்லும் வியாபார யுக்தியும் அவர்களுக்கு கைவந்த கலை.
சூப்பர் சிங்கர் ஜுனியர் என்றொரு நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தவாரம் பக்தி சுற்று என்ற பெயரில் பக்தி பாடல்களை குழந்தைகள் பாடுவதாக போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தவறொன்றுமில்லை. யார் யாருக்கு என்னென்ன பக்தி பாடல்கள் பிடிக்கிறதோ அதனை தாராளமாக பாடட்டும்.

ஆனால் பிரமாண்டம் என்ற பெயரில் விஜய் தொலைக்காட்சி செய்துள்ள காரியம் தான் பேசுபொருளாகி உள்ளது. அதாவது அம்மன் பாடல்கள், ஐயப்பன் பாடல்கள், முருகன் பாடல்கள் என்று ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் பயிற்சி எடுத்த பாடல்களை பாடினர். அதற்கு தகுந்த வீடியோ காட்சிகள் பின்னால் இருக்கும் எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்டது.
இதையும் படிங்க: Prabhu Ganesan: நடிகர் பிரபுவுக்கு மூளையில் நடந்த அறுவை சிகிச்சை; என்ன ஆனது? பதறும் ரசிகர்கள்!
அதுபோதாதென்று அம்மன் பாடல் பாடும்போது, அம்மன் சிலை ஒன்றை மேடையிலேயே நிறுவி, அதற்கு பாலாபிஷேகம், குங்கும அபிஷேகம், திருநீறு அபிஷேகம் என்று ஒரு கோயிலில் எப்படி அபிஷேக ஆராதனைகள் நடைபெறுமோ அதேபோன்று செய்தனர். பூக்களை கொட்டியும், மந்திரங்களை ஓதியும், கற்பூர ஆரத்தி காட்டியும் வழிபாடுகள் நடைபெற்றது.

போதாக்குறைக்கு தீபம் ஏற்றப்பட்ட தட்டினை பார்வையாளர்கள் ஒவ்வொருவரிடமும் கொண்டு சென்று காட்ட அவர்களும் பக்தி பரவசத்துடன் கண்களில் அதனை ஒற்றிக் கொண்டனர். நடுவர்களாக அமர்ந்திருந்த பாடகி சித்ரா, பாடகர் மனோ, இசையமைப்பாளர் டி.இமான் ஆகியோரிடமும் ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
இதில் என்ன தவறு என்று ஒருசிலர் கேள்வி எழுப்பக்கூடும். அதேநிகழ்ச்சியில் கிறிஸ்தவ பாடலொன்றும் இசைக்கப்பட்டது. அதற்கு இதுபோன்று எந்தவிதமான கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இஸ்லாமிய மதம் சார்ந்து பாடல் இசைக்கப்பட்டிருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.

இந்தியா அடிப்படையில் மதச்சார்பின்மையை கடைபிடிக்கும் நாடு. விஜய் தொலைக்காட்சியை அனைத்து மதத்தினரும் தான் பார்க்கின்றனர். அப்படி இருக்கும் போது ஒரு மதத்தினை மட்டும் விதந்தோதி, பிற மதத்தினரை கண்டும் காணாமல் இருப்பது ஒருபக்க சார்பு நிலைப்பாடு இல்லையா? ஒன்று எல்லா மதத்தினருக்கும் சமவிகிதத்தில் வாய்ப்பு தந்து நிகழ்ச்சியை வடிவமைக்க வேண்டும் அல்லது யாருக்குமே எதுவும் செய்யாமல் வெறும் பாடலை மட்டும் பாடி கொண்டு சென்று இருக்க வேண்டும்..
பெருவாரியான பார்வையாளர்களை கவரவேண்டும் என்பதற்காக எதற்காக இப்படி ஒரு நிகழ்ச்சியை வடிவமைக்க வேண்டும். நடுநிலைமை என்று ஒன்று வேண்டாமா? சம்பந்தபட்டவர்கள் யோசிக்க வேண்டும்..
இதையும் படிங்க: Keerthy Suresh: குட்டை டவுசரில் ஹனிமூன் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் போட்டோஸ்!