உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில், மக்களிடையே நிலப்பரப்பு அல்லது பகுதி மற்றும் மொழி ரீதியிலாகப் பிளவை ஏற்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முயல்கிறார். மொழி மக்களை ஒன்றிணைக்க வேண்டுமே தவிர பிரிக்கக் கூடாது என்று தெரிவித்தார். மேலும் தமிழ் பழமையான மொழிகளில் ஒன்று எனக் குறிப்பிட்ட யோகி ஆதித்யநாத், வாக்கு வங்கிக்கு ஆபத்து வரும்போது, ஸ்டாலின் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என விமர்சித்தார்.

ஏன் இந்தியை வெறுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய யோகி ஆதித்யநாத், மூன்றாவது முறையாக வாரனாசியில் காசி தமிழ் சங்கத்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதில் பதிவிட்டார். அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது, இருமொழிக் கொள்கை மற்றும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை நிர்ணயம் குறித்த தமிழ்நாட்டின் நியாயமான மற்றும் உறுதியான குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.
இதையும் படிங்க: NDA கூட்டணி அமைந்துவிட்டது...டிடிவி, ஓபிஎஸ் நிலை என்ன? அண்ணாமலை நீடிப்பாரா? தொகுதிகள் எவ்வளவு?

இது பாஜக தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர்களின் நேர்காணல்களைப் பாருங்கள். இப்போது உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெறுப்பு குறித்து எங்களுக்குப் போதிக்க விரும்புகிறாரா? எங்களை விட்டுவிடுங்கள். இது முரண்பாடல்ல, இது அவர்களின் இருண்ட அரசியலின் கருப்பு நகைச்சுவை. நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை; திணிப்பு மற்றும் பேரினவாதத்தை தான் எதிர்க்கிறோம். இது வாக்குகளுக்கான கலவர அரசியல் அல்ல. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் அமைப்பு மற்றும் கூட்டாட்சி முறையின் பாதுகாவலர் என பொய் பேசி மற்றவர்களை ஏமாற்றும் ஒரு ஏமாற்றுக்காரர். பொதுவாக இது போன்ற ஏமாற்றுக்காரர்கள் பணக்காரர்களைத்தான் ஏமாற்றுவர். ஆனால், திமுகவினர் எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை. அவர்கள் பணக்காரர்களையும் ஏமாற்றுகின்றனர், ஏழைகளையும் ஏமாற்றுகின்றனர்.

முதலமைச்சர் குடும்பத்தினர் 3 அல்லது அதற்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றுத் தரும் தனியார் பள்ளிகளை நடத்துவதும், அவர்களுடைய கல்வி கொள்கையை அரசு பள்ளி மாணவர்கள் விஷயத்தில் எதிர்ப்பதும் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்து வைத்துள்ளனர். மக்கள் உங்களை நயவஞ்சகர் என அழைக்கிறார்கள். திமுகவினர் மும்மொழி கொள்கைக்கு எதிராக சில இடங்களில் நடத்திய நாடகம், ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரதிபலிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கொண்டு இருக்கிறார்.

முக்கியமில்லாத விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்ப நீங்கள் எடுத்த முயற்சிகள் அம்பலமாகிவிட்டன. அதை நீங்கள் உணரவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். நீங்கள் அறியாமை என்கிற பேரின்ப உலகத்திலேயே வாழுங்கள். நாங்கள் தொந்தரவு செய்ய மாட்டோம் என அண்ணாமலை கூறி உள்ளார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.. ஒரே நேர்க்கோட்டில் எடப்பாடி பழனிச்சாமி - அண்ணாமலை..!!