''எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? எனக் கேட்டதோடு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட எனது மனைவி 1000 மடங்கு புத்திசாலி'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவையும், அக்கட்சி தலைவர்களையும் ரொம்பவே மட்டம்தட்டி பேசி இருந்தார். இதனால் ரத்தத்தின் ரத்தங்கள் கொந்தளித்தே போனார்கள். இனிமேல் பாஜகவுடன் கூட்டணி வைக்கவே கூடாது என சத்தியம் செய்து அடித்துக் கூறி வந்தார்கள். எடப்பாடி பழனிசாமியும் ''முடிந்தது முடிந்ததுதான்.. இனிமேல் பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை'' என உறுதியாகச் சொல்லி வந்தார்.

பாஜகவின் மாநில தலைவரான அண்ணாமலையை மாற்றினால்தான் அதிமுகவுடன் கூட்டணி சேர முடியும். அதிமுகவினரின் ஆதரவு இல்லை என்றால் தமிழகத்தில் கால்ஊன்றவே முடியாது என பாஜகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் டெல்லி தலைமைக்கு எடுத்துச் சொல்லி வந்தார்கள். அதன் பிறகு அண்ணாமலையின் செயல்பாடுகளைத் தெரிந்து கொண்ட பாஜக தலைமை அண்ணாமலை பதவியை பறிக்கும் முடிவுக்கு வந்து விட்டதாக பேசப்பட்டது. எல்லாம் முடிந்தது... அடுத்த தலைவர் நயினார் நாகேந்திரன்தான் என்ற நிலைக்கு சென்ற நிலையில் பாஜக தலைமையை சரிக்கட்டி 'இனிமேல் அதிமுக பற்றி பேசமாட்டேன். யாரையும் விமர்சனம் செய்யமாட்டேன்' என உறுதியாக கூறி நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் தமிழக பாஜக பயப்படாது... தமிழிசை கைதுக்கு எதிராக அண்ணாமலை ஆவேசம்...!

காத்திருந்து பாருங்கள், இனிமேல் அதிமுக நிர்வாகிகளே என்னை புகழ்ந்து பேசும் அளவுக்கு நடந்து கொள்வேன். கூட்டணி பற்றி வாய் திறக்கவே மாட்டேன் என அடித்த்துச் சொல்லி இருக்கிறார். அதனை உலகுக்கு தெரிவிக்கும் வகையில்தான் மார்ச் 3 ஆம் தேதி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விகாஸ்- தீக்ஷனா ஆகியோரின் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரின் கைகளையும் பிடித்து நட்பை வெளிக்காட்டியுள்ளார் அண்ணாமலை.
பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை, மத்திய அமைச்சர் முருகன், குஷ்பு ஆகியோர் ஒன்றாக வந்திருந்து வாழ்த்தியிருக்கிறார்கள். அதுவும் அண்ணாமலை வரும்போது முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, நத்தம் விசுவநாதன் போன்றோர் அண்ணாமலையின் கையைப் பிடித்து வரவேற்று மகிழ்ந்தனர். வேலுமணியும் அண்ணாமலையை இன்முகத்தோடு வரவேற்றார்.
வேலுமணியின் மகனும், மணப்பெண்ணும் அண்ணாமலையின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இதெல்லாம் அரசியல் வட்டாரத்தில் விவாதமாகின. ஆனாலும், தற்போது அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் நல்ல பெயர் வாங்கி விட்டதால் அண்ணாமலையின் தலைவர் பதவி தப்பியதாக பாஜகவினரே கூறி வருகிறார்கள்.

இதனால் மிகவும் வருத்தத்தில் இருப்பது பாஜகவின் சில முக்கிய நிர்வாகிகள்தான். இந்தத் திருமண விழாவுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவில்லை. ஆனால், எடப்பாடியாரிடம் எப்போது அண்ணாமலை நட்பைக் காட்டப்போகிறார். அதற்கு எடப்பாடியாரின் ரியாக்சன் எப்படி இருக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அதிமுக-பாஜக கட்சியினர்.
இதையும் படிங்க: 2026ல் தமிழ்நாட்டில் இது நடக்கும்...அண்ணாமலை சொன்ன ஆரூடம்!!