வெற்றிகரமாக 100-வது நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சி அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி 24 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் இப்போது 6 போட்டியாளர்கள் மல்லுக்கட்டும் இடத்தில் வந்து நிற்கிறது.
இந்த வார ஞாயிற்றுக்கிழமை (12/1/25) பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக பிக்பாஸ் அரங்கேறியது. வேட்டி சட்டையில் மேடைக்கு வந்த தொகுப்பாளரும், நடிகருமான விஜய் சேதுபதி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை கூறி நிகழ்ச்சியைத் தொடங்கினார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் 13 வாரங்களாக விளையாடி வந்த கடைசி 8 பேரும், வெளியேற்றப்பட்டு மறுவாய்ப்பாக வந்துள்ள 8 பேரும் என 16 பேர் களத்தில் உள்ளனர். இதில் சனிக்கிழமையன்று அருண் வெளியேற்றப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட போவது யார் என்ற எதிர்பார்ப்போடு நிகழ்ச்சி ஆரம்பித்தது.
இதையும் படிங்க: பிக்பாஸ் சீசன் - 8: TICKET TO FINALE வென்ற ரயான், வெளியேற்றப்பட்ட மஞ்சரி...

வழக்கமாக வீட்டின் உள்பகுதியில் அமரும் போட்டியாளர்கள் இந்தமுறை வீட்டிற்கு வெளியே புல்வெளியில் அமர வைக்கப்பட்டனர். மறுவாய்ப்பாக வந்த 8 பேரும், பொதுவெளியில் நடக்கும் எதிர்வினைகளை பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளவர்களிடம் கூட அவர்களை வறுத்து எடுத்தார் விஜய் சேதுபதி. குறிப்பாக ரவீந்தரை அழவைத்து விட்டார்.
அதன்பிறகு இந்தவாரம் வெளியேற்றப்படும் போட்டியாளர் யார் என கேள்வி எழுப்பி, சிறு சஸ்பென்ஸ் வைத்து தீபக் என்று விஜய்சேதுபதி கூற பார்வையாளர்கள், பங்கேற்பார்கள் என அனைவருக்கும் அதிர்ச்சி. குறிப்பாக முத்துக்குமரன் ஐயோ என்று கத்தி தலையில் கையை வைத்து கவிழ்ந்து விட்டார். போட்டியின் இறுதிவரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட தீபக், 14-வது வாரத்தில் வெளியேற்றப்பட்டது அனைவரையும் திக்குமுக்காட செய்துவிட்டது.

அதேசமயம், கடந்த 7 சீசன்கள் மற்றும் நடப்பு 8-வது சீசன் ஆகியவற்றில் மொத்தமாக இதுவரை கேப்டனாக செயல்பட்டவர்களில் தீபக் தான் சிறந்த கேப்டன் என பிக்பாஸ் கூறியதும் தீபக் கண்கலங்கி விட்டார். இதனை சக போட்டியாளர்கள் அனைவரும் ஆமோதித்தது பார்க்கவே சிறப்பாக இருந்தது.
தீபக் வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் எதிர்பாராத விருந்தினராக அடியெடுத்து வைத்துள்ளார் தர்ஷிகா. இது ஆட்டத்தை மேலும் சுவாரஸ்யமாக்கி உள்ளது. ஏனென்றால் விஷால் - தர்ஷிகா இடையே ஒரு மென்காதல் இருப்பதாக தெரிந்தது. இதனை உறுதிபடுத்தும் விதமாக தர்ஷிகா பேசியும், பழகியும் வந்தார். விஷாலும் அவ்வாறே பழகி வந்த நிலையில், திடீரென தர்ஷிகா தனக்கு வெறும் தோழி என்று கூறியது அதிர்ச்சிகரமாக இருந்தது. அதுபோதாதென்று அன்ஷிதாவை காதலிப்பதாகவும் கூடுதல் அதிர்ச்சியைத் தந்தார் விஷால். இந்த சூழ்நிலையில் தர்ஷிகா வருகை, ஆட்டத்தின் போக்கை மாற்றும் என்று பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். வருகிற 19-ந் தேதி பிக்பாஸ் சீசன் - 8-ன் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜய் தொலைக்காட்சிக்கு ஒரு கேள்வி.. நடப்பது பாடல் போட்டியா? பக்தி பிரசாரமா?