விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரை சேர்ந்தவர் மதீஸ்வரன். கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டு கோவையில் கட்டிட வேலை பார்த்த போது, கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இருவரும் தெற்கு வெங்காநல்லூரில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு சைனோஸ்ரீ என்ற பெண் குழந்தை பிறந்தது. 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்தது. தினமும் வீட்டில் சண்டை, சச்சரவு எழுந்தது. குழந்தைக்கு 4 வயதாகும் போது, பிரியா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடினார்.

பலருக்கு மத்தியில் மனைவி நடனமாடுவது மதீஸ்வரனுக்கு பிடிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையில் சண்டை அதிகரித்தது. பிரியா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என மதீஸ்வரன் தடுத்துள்ளார். கணவரின் பேச்சை மீறி பிரியா ஆடல், பாடல் நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் பிரச்னை பூதாகரமாகி விட கடந்த 2017 ம் ஆண்டு, கணவர் மதீஸ்வரனை பிரிந்த பிரியா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மதீஸ்வரன் தனது பெண் குழந்தையுடன் அதே பகுதியில் வேறு வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகப்பட்டதால் விபரீதம்.. கணவனின் கண்ணில் பெவிகால் ஊற்றி தீ வைத்து கொளுத்திய மனைவி..!

இந்நிலையில் குழந்தையை பிரிந்த பிரியா சோகத்தில் இருந்துள்ளார். 2018ம் ஆண்டு ஜூன் மாதம், குழந்தையை தன்னுடன் ஒப்படைக்க வேண்டும் என ராஜபாளையம் போலீசாரிடம் புகார் அளித்தார். பெண் குழந்தை என்பதால், தாயிடம் தான் குழந்தை வளர வேண்டும். குழந்தைக்கு 18 வயது ஆன பிறகு குழந்தை யாருடன் இருப்பது என முடிவெடுத்துக்கொள்ளட்டும் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவரின் புகாரை ஏற்ற போலீசார் மதீஸ்வரனிடம் விசாரிப்பதாக கூறி அனுப்பி உள்ளனர். பிரியாவும் மீண்டும் தனது தாய் வீடு செல்வதற்காக ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

இந்நிலையில், தனது மனைவி மீண்டும் குழந்தையை கேட்டு போலீசில் புகாரளித்து இருப்பதை அறிந்த கணவர், மதீஸ்வரன் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தார். அங்கு ஊருக்கு திரும்பி செல்வதற்காக காத்திருந்த தனது மனைவியிடம் சமரசம் பேசியுள்ளார். ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆடும் பெண்ணுடன் பெண் குழந்தை வளர்ந்தால் அந்த குழந்தையின் எதிர்காலம் வீணாகும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது ஏற்பட்ட தகராறில், மதீஸ்வரன் தன் கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரியாவை கை, தோள் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.

அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மதீஸ்வரனை கைது செய்தனர். வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. இந்நிலையில், மதீஸ்வரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 11,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: மனைவி நடத்தையில் சந்தேகம்.. கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் கைது.. இறுதிச்சடங்கில் நடந்த ட்வீஸ்ட்..!