எந்த நோய் என்னவிதமான பாதிப்பை உண்டு பண்ணுமோ, உயிரே போய்டுமோனு அச்சத்தோட தான் உலாவ வேண்டி இருக்கு. அதுக்கு ஏத்த மாதிரி புதுசுபுதுசா ஏதாச்சும் ஒரு நோய்த்தொற்று குறித்து மருத்துவ உலகம் அறிவிப்புகளை வெளியிட்டுக்கிட்டு தான் வராங்க..
2025 புதுவருஷம் பொறந்தவுடனே, அப்பாடா இந்த வருஷமாச்சும் நல்லது நடக்காதானு ஏங்கிகிட்டு இருந்தா, இந்தா புடிங்க புது நோய்த் தொற்று ஒன்னு வந்து இருக்கு, உஷாரா இருங்கனு தமிழக அரசின் சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்காங்க. அந்த புது நோய்த்தொற்றோட பேரு ஸ்கரப் டைபஸ்.(SCRUB TYPHUS). என்னது ப்யூட்டி பார்லர் போய் ஸ்கரப் செஞ்சிக்கிட்டா நோய் வருமானு பதற வேண்டாம். இது அப்படி இல்லை.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதார துறை இயக்குநர் செல்விநாயகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்ன சொல்லி இருக்காங்கனா... ஸ்கரப் டைபஸ் என்பது ஒருவகையான பாக்டீரியா தொற்று என்றும், ரிக்கட்சியா எனும் பாக்டீரியாவால் தாக்கப்பட்ட ஒட்டுண்ணிகள், பூச்சிகள் மனிதர்களை கடிக்கும்போது இது பரவுவதாக கூறப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு, தோல் அரிப்பு போன்றவை இந்த நோயின் அறிகுறிகள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய வடமாவட்டங்களில் இந்த ஸ்கரப் டைபஸ் நோய்த் தொற்று சமீப காலமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரி யாருக்கெல்லாம் இந்த நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று பார்த்தால் காடுகளுக்கு அருகே வசிப்பவர்கள், வேளாண்குடி மக்கள், பூங்காக்களுக்கு அருகில் குடியிருப்போர், மலையேற்றம் செய்பவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட கூடுதல் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நமக்கு ஸ்கரப் டைபஸ் நோய் வந்து இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிப்பது என்றால்? எலிசா ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு ரத்தப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம் கண்டறியலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சரி, ஸ்கரப் டைபஸ் நோய் தாக்குலுதலுக்கு ஆளாகி விட்டோம், எப்படி மீள்வது என்றால்? அசித்ரோமைசின், டாக்சிசைக்ளின் ஆகிய நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொண்டாலே மீண்டு விடலாம் என்று மருத்துவ உலகம் சொல்கிறது. அப்படியும் குணமாகவில்லை என்றால் ரத்த நாளங்களின் வழியாக திரவ மருந்துகளை உட்செலுத்தி சிகிச்சை பெறலாம் அதில் தீர்வு கிட்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எனவே மக்களே மார்கழி மாசம் தானே குளிருது அதனால் காய்ச்சல், அதனால் உடம்பு அரிக்குதுனு இயல்பாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவர்களை நாடி இந்த ஸ்கரப் டைபஸ் தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதி செய்து உடல்நலம் பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்..

புதுவருஷத்துல நாம சாதிக்க எவ்வளவோ இருக்கு., இப்படி ஸ்கரப் டைபஸ் வந்து படுத்துக்கிட்டா நம்ம வேலையா வேற யார் செய்வா? சொல்லுங்க பார்க்கலாம்...
இதையும் படிங்க: தமிழகத்தில் அதிகரிக்கும் புது வகை காய்ச்சல் ' 'ஸ்க்ரப் டைபஸ்' ...இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாதீர்கள்.
இதையும் படிங்க: தமிழகத்தில் அதிகரிக்கும் புது வகை காய்ச்சல் ' 'ஸ்க்ரப் டைபஸ்' ...இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாதீர்கள்.