வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் 7 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறை ரெய்டு:
கடந்த மக்களவை தேர்தலின் போது வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. முதலில் கதிர் ஆனந்த் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத 10 லட்சம் ரூபாய் சிக்கியது.
இதையும் படிங்க: திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு செக் வைத்த அமலாக்கத்துறை... 22-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவு...

இதனையடுத்து துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் கட்டுக்கட்டாக 11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வேலூர் தொகுதிக்கு முதலில் தேர்தல் நிறுத்தப்பட்டு, மீண்டும் தேர்தல் தொடங்கியது. 2019ம் ஆண்டு வருமான வரித்துறை பதிவு செய்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கை பதிவு செய்திருந்தது. அந்த வழக்கை அடிப்படையாக கொண்டே துரைமுருகனின் வீடு, கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
டெல்லி விரைந்த துரைமுருகன்:
புத்தாண்டின் முதல் தொடக்கமாக அமலாக்கத்துறை தனது சோதனையை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகனின் வீட்டில் இருந்து தொடங்கியது. வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள இல்லத்தில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் வேலூர் நாடாளுமன்ற எம்.பியுமான கதிர் ஆனந்த் ஒன்றாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த வீடு மற்றும் கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, துரைமுருகனின் ஆதரவாளர்களான பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோருக்குச் சொந்தமான 4 இடங்களில் ஜனவரி 3ம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

கிட்டத்தட்ட 12 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில், துரைமுருகனின் வீட்டில் பூட்டியிருந்த இரண்டு அறைகளின் கதவுகளை அமலாக்கத்துறை கட்டப்பாறையால் உடைத்து சோதனையிட்டதாகவும், அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சோதனை நிறைவடைவதற்கு முன்னதாக அன்றைய இரவு விமானத்தைப் பிடித்து டெல்லி பறந்தார். முதலில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக டெல்லியில் உள்ள முக்கிய பிரமுகரை பார்க்கவே துரைமுருகன் டெல்லி பறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன் உண்மையான பின்னணி கதிர் ஆனந்தின் கைதை தடுக்கவே அவர் முயன்றதாக கூறப்படுகிறது.
7 முறை சம்மன் அனுப்பிய ED:
2019ம் மக்களவை தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட பண விவகாரத்தில் சட்ட விரோத பரிமாற்றம் நடத்தப்பட்டிருக்கிறதா? என்பதை கண்டறியவே அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியுள்ளது. இந்த ரெய்டு தொடர்பாக கதிர் ஆனந்திற்கு 7 முறை சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை. ஆனால் கதிர் ஆனந்த் வழக்கு விசாரணைக்காக ஒருமுறை கூட ஆஜராகவில்லையாம். அத்துடன் தனது வழக்கறிஞர் மூலமாக எழுத்துப்பூர்வ விளக்கத்தை மட்டுமே அமலாக்கத்துறைக்கு பதிலளித்து வந்துள்ளார்.

இப்படி அமலாக்கத்துறையின் சம்மனை கதிர் ஆனந்த் தொடர்ந்து தட்டிக்கழித்து வந்தால் அவரை கைது செய்யவும் வாய்ப்புள்ளது என துரைமுருகனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்திய துரைமுருகன் உடனடியாக டெல்லி விரைந்ததாக தெரிகிறது. அங்குள்ள முக்கிய புள்ளி ஒருவரைச் சந்தித்து தனது மகனின் கைது நடவடிக்கையை தடுக்கும் படி கேட்டுள்ளார். ஆனால் அந்த முக்கியப்புள்ளி இந்த விவகாரத்தில் உதவமுடியாது என கைவிரித்துவிட்டாராம்.
இதனையடுத்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான முகுல் ரோத்தகியிடம் துரைமுருகன் சட்ட ஆலோசனை நடத்தியுள்ளார். வரும் 22ம் தேதி கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தனது மகன் தொடர்புடைய இந்த விவகாரத்தை துரைமுருகன் தனக்குள்ள செல்வாக்கை வைத்து எப்படியும் உடைத்துக் கொண்டு வெளியே வந்துவிடுவார் என திமுக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சுவாரஸ்யங்கள்... முந்தி கொண்ட காங்கிரஸ்... கோபத்தில் திமுக.... யோசிக்கும் அதிமுக..