இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் எண்ணத்தை தெரிந்து கொள்வதற்காக ஆழம் பார்க்க போட்டியிடலாம் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அதிமுக, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரண்டாக பிளவுபட்டாலும் ஓபிஎஸ்ஸால் பெரும்பாதிப்பை உண்டு பண்ண முடியாத, நிலையில் 11 எம்எல்ஏக்கள் உடன் ஒதுங்கினார். அதன் பின்னர் சசிகலா முதல்வராக வர வாய்ப்பிருந்த நிலையில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை காரணமாக அவர் கூவத்தூரில் கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக நியமித்து சிறைக்கு சென்றார். அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் பாஜகவின் ஆதரவு தேவை என்கிறதன் நிலையில் பொதுச்செயலாளர் சசிகலாவையும், துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனையும் அதிமுகவிலிருந்து நீக்கிய எடப்பாடி அணியினர் டெல்லி மேலிட அழுத்தம் காரணமாக ஓ.பன்னீர்செல்வத்தை கட்சிக்குள் சேர்த்துக் கொண்டனர்.

11 எம்எல்ஏக்கள் உடன் ஒன்றும் இல்லாமல் போன ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்கிற உயரிய பதவிக்கும், துணை முதல்வர் என்கிற பதவியிலும் அமர்த்தப்பட்டார். அதன் பின்னர் டெல்லி மேலிடம் ஓபிஎஸ் மூலம் அதிமுகவில் பல குழப்பங்களை விளைவித்தது. வேண்டாத விருந்தாளியாக பாஜகவால் திணிக்கப்பட்ட ஓபிஎஸ்-ஐ ஒதுக்கியே வைத்திருந்தனர் அதிமுகவின் பிற தலைவர்கள். இந்த நிலையில் தொடர்ந்து ஓபிஎஸ் மூலம் கட்சிக்குள் பிரச்சனை வர, கட்சி முறையாக செயல்பட முடியாமல் தடுமாற்றத்தை சந்தித்தது.
முதல்வர் வேட்பாளருக்கு நான் தான் நிற்பேன் என ஓபிஎஸ் போட்டியிட்டு பின் ஒதுங்கினார், தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலுக்குப்பின் மோதல் போக்கு அதிகரித்தது திமுகவிற்கு பகிரங்கமாக ஓபிஎஸ் சப்போர்ட் செய்தது அதிமுகவினரிடையே கோபத்தை வரவழைத்தது. அதன் பின்னர் கட்சியின் பைலாவை மீண்டும் திருத்தி பொதுச்செயலாளர் பதவி மீண்டும் கொண்டு வரப்பட்ட நிலையில் பொதுச் செயலாளராக நான் தான் நிற்பேன் என ஓபிஎஸ் பிடிவாதம் பிடிக்க, பின்னர் அதிலிருந்தும் ஓபிஎஸ் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஓபிஎஸ் உள்ளிட்ட சிலர் தனி கோஷ்டியாக செயல்பட்டனர். பின்னர் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது இந்த பொதுக்குழுவை தடுத்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு அதிமுகவின் பெரும்பான்மை பெற்ற எடப்பாடி அணிக்கு சாதகமாக வந்தது. பின்னர் பொதுக்குழு கூட்டம் நடந்த நிலையில் அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்ட பின் பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அவைத்தலைவர் தேர்வு செல்லாது என ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவை தலைவர் தேர்வு சரியானது அவர் பொது குழுவை கூட்டலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சுவாரஸ்யங்கள்... முந்தி கொண்ட காங்கிரஸ்... கோபத்தில் திமுக.... யோசிக்கும் அதிமுக..

பின்னர் பொதுக்குழு கூட்டம் நடந்த நிலையில் 98 சதவீதத்திற்கும் மேலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு தேர்வு செய்யப்பட்டார். எதிர்த்து போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கே போகவில்லை. பின்னர் பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கும் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு பொதுக்குழு செல்லும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டது செல்லும், ஓபிஎஸ்சை கட்சியை விட்டு நீக்கியதும் செல்லும் என்று தீர்ப்பு வந்தது.
அதன் பின்னரும் ஓபிஎஸ் தொடர்ந்து தன்னுடைய முயற்சியில் சற்று மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக, ஓபிஎஸ், டிடிவி என அனைவரும் ஒன்று சேர்ந்தனர். ஆனாலும் சசிகலா இந்த அணியில் இணையாமல் தனித்து செயல்பட்டு வருகிறார். கே.சி.பழனிச்சாமியின் பொதுச் செயலாளர் தேர்வுகளுக்கு வழக்கு தொடர்ந்து உள்ளார். இவைகள் ஒருபுறம் இருக்க ரெட்டை இலை சின்னத்தை அதிமுகவிற்கு வழங்கக் கூடாது என்ற வழக்கு நீதிமன்றத்தில் ஒருவரால் தொடரபட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அதுகுறித்து பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் சமீப காலமாக திமுக ஆதரவு ஊடகங்கள் மூலம், இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு கிடைக்காது, இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். இரட்டை இலை சின்னத்தை வைத்து அதிமுக பாஜக கூட்டணிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது, ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்-க்கு வழங்கி பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படும், என்றெல்லாம் கதைகள் நாளுக்கு நாள் கட்டிவிடப்படுகின்றன. ரெட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதன் மூலம் இரட்டை இலை சின்னம் குறித்த தேர்தல் ஆணையம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். ஏனென்றால் இதே ஈரோடு இடைத்தேர்தலில் தான் ஓபிஎஸ்- எடப்பாடி அணி தனித்தனியாக போட்டியிட்டது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வியும் எழுந்தது. அதிமுக யாருக்கு என்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்கு நிலுவையிலிருந்தது. அந்த நேரத்தில் அதிமுக எடப்பாடி அணியின் சார்பில் தென்னரசு போட்டியிட்டார். பன்னீர் செல்வம் அணியின் சார்பில் செந்தில் முருகன் போட்டியிட்டார்.

இரட்டை இலை சின்னத்தை பெற அதிமுகவின் எடப்பாடி அணி உச்சநீதிமன்றத்தை நாடியது, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு சென்ற பொழுது, அதிக பொதுக்குழு உறுப்பினர்களை யார் வைத்துள்ளார்களோ அவர்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அந்த கடிதங்களை வாங்கி தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க வேண்டும் தேர்தல் ஆணையம் பரிசீலித்து அதிக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளவர்களுக்கு இரட்டை இலையை ஒதுக்க வேண்டுமென உத்தரவிட்டது. அதன்படி அதிக எண்ணிக்கை பொதுக்குழு உறுப்பினர்களால் ஆதரிக்கப்பட்ட எடப்பாடி அணிக்கு இரட்டை இலை கிடைத்தது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் பல்வேறு கதைகள் கட்டப்பட்டு வரும் நிலையில், இரட்டை இலை சின்னம் பிரச்சனை மீண்டும் ஊதி பெரிதாகப்படும் நிலையில், மத்திய அரசு இதில் அதிமுகவிற்கு இடையூறு விதிக்கலாம் என்கிற நிலையில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை பயன்படுத்தி ஏற்கனவே வாங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை அதிமுக பெற்றால் அதிமுகவிற்கான பெரிய அங்கீகாரமாக அது மாறும்.
இரட்டை இலை சின்னம் குறித்த பலரது புனை கதைகள் ஒன்றும் இல்லாமல் போய்விடும். 2026 தேர்தலில் அதிமுகவிற்கு இது சாதகமாக இருக்கும், கூட்டணி குறித்து சுதந்திரமாக முடிவு எடுக்க இது சாதகமாக அமையும் என்று அதிமுக தலைமை கருதுகிறது. இதனால் வருகின்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை குறித்த முந்தைய உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஒரு தீர்ப்பை வாங்குவதற்காக அதிமுக கட்டாயம் போட்டியிடும் என தெரிகிறது.
இதையும் படிங்க: அரசு அலுவலகங்களில் வேக, வேகமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்கள் அகற்றம் - பரபரக்கும் ஈரோடு!