மதுரை மத்திய சிறையில் 2016 முதல் 2021 வரை சிறைக்கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்கியதிலும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ததில் ரூ.1.63 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக மதுரை சிறைத்துறை எஸ்பி உள்பட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

கடலூர் சிறைத்துறை எஸ்பி எம்.ஊர்மிளா, பாளையங்கோட்டை கூடுதல் எஸ்பி எஸ்.வசந்த கண்ணன் உள்ளிட்ட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிறைத்துறை கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: வீடியோ காலில் அழைத்த இளம்பெண்.. ஜொள்ளு பார்ட்டிகள் தான் டார்கெட்.. சமூக வலைதளங்களில் அரங்கேறும் மோசடி..!

மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகள் மூலமாக மாஸ்க், கையுறை போன்ற மருத்துவ பொருட்கள், ஆபீஸ் கவர்கள் தயாரிக்கப்பட்டு அரசு அலுவலங்கள், நீதின்றங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு இவ்வாறு விற்பனை செய்த போது போலி ரசீது தயாரித்து பலகோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் அப்போது மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த புகார் தொடர்பாக தணிக்கைத்துறை அதிகாரிகள் ஆவணங்களை ஆய்வு செய்து ஊழல் தடுப்பு இயக்குனரகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை 1 கோடியே 63 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மோசடி நடந்தது உறுதிசெய்யப்பட்டது.

மதுரை மத்திய சிறையில் முறைகேடு நடைபெற்ற நாட்களில் சிறைத்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி தற்போது புதுக்கோட்டை மத்திய சிறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஊர்மிளா, மதுரை சிறையின் ஜெயிலராக பணியாற்றி தற்போது பாளையங்கோட்டை சிறையின் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் வசந்தகண்ணன், தற்போது வேலூர் சிறையில் நிர்வாக அதிகாரியாக உள்ள தியாகராஜன் உள்ளிட்ட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த ஜனவரியில் வழக்குப்பதிவு செய்தனர்.

அதனை தொடர்ந்து இப்போது புதுக்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா, பாளையங்கோட்டை சிறையின் கூடுதல் கண்காணிப்பாளர் வசந்தகண்ணன், வேலூர் சிறை நிர்வாக அதிகாரி தியாகராஜன் ஆகிய மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள போலீசாரே முறைகேட்டில் ஈடுபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: “எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம்...” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!