பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் மகாகும்பமேளாவில் நடந்த கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் உடல்கள் மண் அள்ளும் எந்திரம் மூலம் அள்ளப்பட்டு, டிராக்டரில் கொண்டு செல்லப்பட்டன என்று சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா நிகழ்ச்சி உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 29ம் தேதி தை அமாவாசையன்று புனிதநீராட திரிவேணி சங்கத்துக்கு சென்ற பக்தர்கள் கூட்டநெரிசலில் சிக்கினர். இதில் 30 பேர் பலியானார்கள், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்தது.

இந்த சோகநிகழ்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற பட்ஜெட்கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து வலியுறுத்தி வந்தன. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்றுப் பேசுகையில் “, மடாதிபதிகள் புனிதநீராடுதலை ஒத்திவைக்கக் கேட்டுக்கொண்டு சனாதன பாரம்பரியத்தை பாஜக அரசு அவமதித்துவிட்டது. மகா கும்பமேளாவில் நடந்த கூட்டநெரிசல் சம்பவத்தில் நடந்த குளறுபடிகள், தவறான மேலாண்மை ஆகியவற்றை மூடி மறைக்க உ.பி. அரசு முயல்கிறது, இதற்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை உபி. அரசு தூக்கி எறிந்துள்ளது. ஹெலிகாப்டர் மூலம் உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு, இடுகாட்டில் தூக்கி வீசப்பட்டுள்ளன. என்னவிதமான சனாதனப் பாரம்பரியத்தை கடைபிடிக்கிறார்கள்.
உடல்கள் ஆங்காங்கே கிடக்கின்றன, ஆடைகள், காலனிகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. மண்அள்ளும் ஜேசேபி எந்திரம் கொண்டு உடல்கள்கள் அள்ளப்பட்டு, டிராக்டரில் கொண்டு செல்லப்பட்டன. இதைக் பார்த்து எங்கும் அழுகுரல்கள். ஆனால் இதை உ.பி அரசு மூடி மறைக்கப்பார்க்கிறது.
டிஜிட்டல் கும்பமேளாவை நடத்துவதாக உ.பி. அரசு தெரிவிக்கிறது. ஆனால், எத்தனை பேர் பலியானார்கள் என்ற விவரங்களை சொல்ல மறுக்கிறது. தொடர்ந்து பட்ஜெட்டில் வரும் எண்களை மட்டுமே இந்த அரசு பேசுகிறது, கும்பமேளாவில் உண்மையில் எத்தனை பக்தர்கள் உயிரிழந்தார்கள் என்ற எண்ணிக்கை இல்லை.
கும்பமேளாவில் நடந்த உயிரிழப்புகள், விபத்துகள், காயமடைந்தவர்கள் விவரம், மருந்துகள் இருப்பு விவரம், மருத்துவர்கள், குடிநீர், உணவு, போக்குவரத்து குறித்த விவரங்களை நாடாளுமன்றத்தில் வழங்கிட வேண்டும்.

கும்பமேளாவில் புனித நீராடி ஆசிர்வாதம் பெற வந்த பக்தர்கள் அதற்குப் பதிலாக தங்களின் உறவினர்களை இழந்து, பறிகொடுத்து சென்ற காட்சி நடந்தது. உடல்களை பார்த்தபின்பும், இந்த அரசு உடல்கள் எண்ணிக்கையை ஏற்க மறுக்கிறது” எனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில் “ கும்பமேளா கூட்டநெரிசலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கருதுகிறேன். இது என்னுடைய கணிப்புதான். இது தவறாக இருந்தால், உ.பியில் ஆளும் பாஜக அரசு உண்மையான எண்ணிக்கையைத் தெரிவிக்கட்டும். உண்மை என்ன என்று கூறட்டும். அப்போது நான் சரி செய்து கொள்கிறேன். நான் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. எத்தனை பக்தர்கள் உயிரிழந்தார்கள், அதற்கான தகவலையாவது குறைந்தபட்சம் வழங்கிடுங்கள். நான் தவறாக தகவல் கூறியிருந்தால் மன்னியுங்கள். எத்தனை பேர் உயிரிழந்தார்கள், எத்தனைபேரைக் காணவில்லை என்பது குறித்த தகவல் தேவை” எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: அகோரியாக மாறினார் ! 27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை கும்பமேளாவில் கண்டுபிடித்த குடும்பத்தினர்
இதையும் படிங்க: 'கும்பமேளா பியூட்டி' மோனலிசாவுக்கு சினிமா வாய்ப்பு: " இதுதான் என் உலகம்..." டெண்ட் கொட்டாய் வீடு காட்டி வீடியோ போட்டு உருக்கம்..!