திராவிட கட்சிகளால் எந்தப் பயனும் இல்லை என்று நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்து தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வருகிறார் சீமான். அவரது அனல் பறக்கும் பேச்சைக் கேட்டு அணிஅணியாக இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். தேர்தலில் யாருடனும் கூட்டு இல்லை என்று முடிவு எடுத்து தோல்வி கண்டாலும் தொடர்ந்து ஆறுக்கும் மேற்பட்ட தேர்தலில் சந்தித்து 8 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி வைத்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சீமானின் பேச்சுக்கு ஈர்க்கப்பட்டு இடதுசாரி கட்சிகள் போல் தொண்டர் கூட்டமாய் இணைந்துள்ளனர். நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்த கட்டத்தில் இருக்கின்ற தலைவர்கள் பலரும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வரும் நிலையில், திடீரென நாம் தமிழர் கட்சிக்குள் கட்சி நிர்வாகிகளை சீமான் மதிப்பதில்லை அடுத்த கட்ட தலைவர்களை வளர விடாமல் பார்த்துக் கொள்கிறார், ஒரு சிலர் மட்டுமே வளர்கின்றனர்.
இதையும் படிங்க: ஆளுநர் விருந்து திமுக புறக்கணிக்குமா? அரசு சார்பில் கலந்துக்கொள்வார்களா?
சீமான் நிர்வாகிகளின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதில்லை, மதிக்க மாட்டேங்கிறார், ஆண்டுக்கணக்கில் உழைத்தாலும் அரசியலில் மேன்மையில்லை என நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்த நிலையில் மாற்றாக வந்த விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் மிகவும் மகிழ்ந்து விஜய் கட்சியில் இணையலாம் என்று முடிவெடுத்திருந்தனர். விஜய் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்ததும் அவருடைய பேச்சும், விஜய் கட்சியில் அனைவருமே புதியவர்கள் என்பதாலும் நாம் தமிழர் கட்சியில் திமுகவுக்கு எதிராக, பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்த அனுபவம் மிக்கவர்கள் விஜய் கட்சியில் இணைவதன் மூலம் தனக்கான ஒரு அங்கீகாரம் கிடைக்கும். தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக நாம் உருவாக்க முடியும் என்கின்ற எண்ணத்தில் தவெகவை அணுகினர்.

ஆனால் தவெக மாநாடு நடத்தி முடித்தவுடன் விஜய் புஸ்ஸி ஆனந்திடமும், ஜான் ஆரோக்கியசாமியிடமும் கட்சியை ஒப்படைத்து விட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டார். ஜான் ஆரோக்கிய சாமியும் புஸ்ஸி ஆனந்தும் அடுத்த கட்டமாக கட்சியை கொண்டு செல்வதில் எவ்வித அக்கறை இல்லாமல் மன்றம் நடத்துவது போல் கட்சியை நடத்திக் கொண்டு கட்சிக்கான நிர்வாகிகளை நியமிப்பதில் கூட எவ்வித செயல்பாடும் இன்றி ஒருவருக்கொருவர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டது ஆடியோவாக வெடித்து வெளிவந்தது.

நிர்வாகிகள் நியமனத்தில் தனக்கு வேண்டியவர்களை நியமிக்கிறார், ஆதாயம் உள்ளவர்களுக்கு பதவி தரப்படுகிறது, கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான எந்தவித முயற்சிகளும் புஸ்ஸி ஆனந்த் ஈடுபடவில்லை, கட்சி பொறுப்புகளுக்கு நியமனத்திற்கு பணம் வசூலிக்கப்படுகிறது என்ற பகிரங்க குற்றச்சாட்டு எல்லாம் புஸ்ஸி மீதும் ஜான் ஆரோக்கிய சாமி மீதும் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சார்ந்த முக்கிய பெண் பிரமுகரும் இன்னொரு பிரமுகரும் விஜயை சந்தித்து தவெகவில் இணைய பேசியது, ஜான் ஆரோக்கிய சாமி மூலம் நாம் தமிழர் கட்சி தலைமைக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது என்றும் இதனால் வருத்தம் அடைந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இதுபற்றி அறிந்த விஜய் அவர்களை பொறுமையாக இருக்கச் சொல்லுங்கள் விரைவில் நல்ல முடிவு எடுக்கிறேன் என்று தெரிவித்ததாகவும் ஒரு தகவல் உண்டு. இது போன்று நாம் தமிழர் கட்சி திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளிலிருந்து தவெக-விற்கு வருவதற்காக முயற்சி எடுப்பவர்களை உள்ளே விடாமல், கண்டுகொள்ளாமல் எனக்கென்ன என்று செயல்படும் புஸ்ஸி, ஜான் செயல்பாடுகளால் விரக்தி அடைந்த மாற்று கட்சியினர் குறித்த தகவல்களை எடுத்த உளவுத்துறை மூலம் கட்சி தலைமை உத்தரவின் மூலம் திமுகவினர் கொக்கி போட்டு தூக்கி உள்ளனர்.
முதல் கட்டமாக நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை திமுக பக்கம் கொண்டு வருவதற்கான அசைன்மென்ட் ராஜீவ் காந்தி வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அதை வெற்றிகரமாக செயலாற்றி 6 மாவட்ட செயலாளர்கள், பல்வேறு பொறுப்பில் உள்ள நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட 3000 பேரை திமுகவில் இணைப்பதற்கான வேலையை கச்சிதமாக செய்து முடித்தார். இதை அடுத்து முதல்வரே நேரில் அவர்களை வரவேற்று கட்சிக்குள் இணைக்கும் நிகழ்வு இன்று அண்ணா அறிவாலத்தில் நடந்தது.

இது பற்றி கருத்து தெரிவித்த தவெக நிர்வாகி ஒருவர் ”இவர்கள் எல்லோரும் தவெகவில் இணைய வேண்டியவர்கள். ஆனால் இங்குள்ள தலைவர்களுடைய சுயநலத்தால், கோஷ்டிமோதலால், மற்றவர்கள் நம் கட்சிக்குள் வந்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தினால் இதையெல்லாம் விஜய் கண்காணிக்காததால் இன்று தவெகவில் இணைய வேண்டியவர்கள் திமுகவிற்குள் ஐக்கியமாகி இருக்கிறார்கள்” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர். ”தவெக நோக்கி வருபவர்களுக்கு எவ்வித சிக்னலையும் கொடுக்காமல், அவர்கள் குறித்த தகவலையும் அந்தந்த கட்சியின் தலைமைக்கு சொல்லும் அளவிற்கு தவெக தலைமை நிலைப்பாடு இருந்ததால் தவெக பக்கம் போவது சிக்கல் என்கிற கருத்தால் பலரும் ஆளுங்கட்சியின் பக்கம் ஒதுங்கி இருக்கின்றனர்” என்றும் வருத்தத்தை பகிர்ந்தனர்.
இதுகுறித்து பேசிய மற்றொரு தவெக நிர்வாகி ஒருவர், “இந்த விவகாரத்தில் தவெக கோட்டை விட்டது என்றே சொல்லலாம். இதுகுறித்து தலைவர் விஜய் சீரியசாக விசாரிக்கணும், நாங்கள் கோட்டை விட்டவர்களை திமுக கொத்திச் சென்றுவிட்டது என்று சொல்லலாம், எம்ஜிஆர் போல் கட்சி நடத்துவேன் என்று சொல்லும் தலைவர் விஜய், எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தவுடன் அணி அணியாய் கட்சிக்குள் இணைந்த மாற்று கட்சியினராய் வரவேற்று அதிமுகவை மேலும் பலமாக ஆக்கி அன்றைய ஆளுங்கட்சி திமுகவிற்கு எதிராக அரசியல் நடத்தி 77 இல் ஆட்சியும் பிடித்தார்.

ஆனால் கட்சி ஆரம்பித்து மூன்று மாதம் முடிந்த நிலையிலும் கட்சிக்குள் நிர்வாகிகளையும் போட முடியாமல், அரசியலுக்கு சம்பந்தம் இல்லாதவர்களை அரசியல் செய்ய விட்டு, கட்சிக்கு வருபவர்களையும் மாற்று கட்சிக்கு தலைமையில் உள்ளவர்களே வெளியில் அனுப்பும் வேலையையும் செய்துள்ளனர். இதனால் திமுக முந்திக்கொண்டது, தவெக கோட்டை விட்டது. இதெல்லாம் அரசியலில் முக்கியம், நாம் இப்பத்தான் நிர்வாகிகளை நியமிப்பது பற்றியே சிந்திக்கிறோம். கட்சித்தலைமைக்கு இது தெரியாத வரை கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்த முடியாது” என வருத்தத்துடன் அவர்கள் எண்ணத்தை பகிர்ந்து கொண்டனர். விஜய் சிந்திப்பாரா? செயல்படுவாரா? இனியும் இணைய வருபவர்களை என்ன செய்ய போகிறார்.
இதையும் படிங்க: ஆளுநர் விருந்து திமுக புறக்கணிக்குமா? அரசு சார்பில் கலந்துக்கொள்வார்களா?