காமாலை நோய் பிடித்தவருக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பது போல் அண்ணாமலைக்கு எல்லாம் மஞ்சளாகத் தெரிவிகிறது என அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வேளாண் பட்ஜெட்டை காகித குவியல் என்று விமர்சித்து இருந்தார். ''வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது. மக்கள் வரிப்பணம் வீண் இந்தப் பொய்களைப் பொது இடங்களில் ஒளிபரப்பினால், மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று யார் இவர்களிடத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம். கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 2023 ஆம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள்.

சாகுபடி பரப்பளவு குறைவு இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், அதை மறைக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 - 2020 சாகுபடிப் பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: நாங்க பி.எச்.டி. தம்பி... நீ LKG விஜய்க்கு பதிலடி கொடுத்த சேகர் பாபு...!
ஏன்? பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம் தமிழக மக்களை எத்தனை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக? பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வந்து அம்புலிமாமா கதைகளைக் கூறிச் சென்றார்'' என விமர்சித்து இருந்தார்.

இதற்கு கடும் பதிலடி கொடுத்துள்ள இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ''தினந்தோறும் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த தலைவர் ஒரு மாநில கட்சியில் இருப்பார் என்றால் அது அண்ணாமலை ஒருவராகத்தான் இருக்க முடியும். காமாலை நோய் பிடித்தவருக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதை போல் எதை எடுத்தாலும் பொய் சொல்லியே பழக்கப்பட்ட அண்ணாமலை என்ன இந்த பட்ஜெட்டை நிறைவாகவா கூறுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், எங்களை வசை பாடியவர்களும், இன்றைக்கு வாழ்த்து சொல்கிற அளவுக்கு நிதிநிலை அறிக்கையை உலக அளவில் தூக்கிப் பிடித்த மதி நுட்பமிக்க அரசியல் தீர்க்கதரிசி எங்களுடைய முதல்வர் என்று இன்று மாநிலம் கடந்து, ஒன்றியத்தை கடந்து உலக அளவில் பல நாடுகள் பாராட்டுகின்ற அளவிற்கு இருக்கும் பொழுது இது போன்ற விலாசம் அற்ற, மக்களுடைய சக்தி பெற முடியாத, மக்களுடைய ஆதரவு பெறாத அண்ணாமலைக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. வேளாண் பட்ஜெட்டை உண்மையான விவசாய குடிமக்கள் வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக ஆட்சிக்கு வந்த முதல்நாள் - அண்ணாமலை எடுத்த சபதம்...!