கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ் மற்றும் மகேஷ். இருவரும் நண்பர்கள். இவர்கள் கோவை துடியலூர் பகுதியில் பேக்கரி கடை மற்றும் ஸ்வீட் கடை நடத்தி வந்தனர். அதே பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். வழக்கமாக காலையிலேயே வந்து கடையை திறந்து வியாபாரம் பார்க்கும் இருவரும், 11 மணிக்கு மேல் தான் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்வது இவர்கள் வழக்கம்.
கடையில் வேலை செய்யும் நபர்களும் இவர்கள் வரும் வரை கடைக்கு வெளியே காத்திருப்பார்கள். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இன்று காலை வெகுநேரம் ஆகியும் கடைக்கு வரவில்லை. வாசலில் காத்திருந்த ஊழியர்கள் பொறுமை இழந்து இருவருக்கும் போன் செய்து உள்ளனர்.

இருவரின் போன் வெகுநேரமாக அடித்தும், இருவரும் போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறாது. ஏதோ நெருடலாக இருப்பதை உணர்ந்த கடை ஊழியர்கள், பேக்கரி உரிமையாளர் தங்கி இருக்கும் வாடகை வீட்டிற்கு நேரில் சென்று பார்ப்பது என முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் இருவரும் தங்கி உள்ள வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது.
வெகுநேரமாக கதவை தட்டியும் இருவரும் கதவை திறக்கவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே மகேஷ் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும் ஜெயராஜ் தூக்கிட்டு நிலையிலும் சடலமாக இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: குனியமுத்தூரில் பயங்கரம்.. வாலிபர் கத்தியால் குத்திக்கொலை.. முன்விரோதத்தால் வெறிச்செயல்..!

அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து போலீசாருக்கு போன் செய்து தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு துணை ஆணையர் சிந்து தலைமையில் அங்கு வந்த துடியலூர் போலீசார் வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தனர். சம்பவ இடத்தில் இருந்த இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிவாகியுள்ள கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டு உள்ளது. வெளிநபர் உள்ளே வந்திருந்தால் எவ்வாறு வெளியே செல்ல முடியும்? வீட்டின் உள்ளே இருந்த மகேசை கொன்றுவிட்டு ஜெயராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் துடியலூரில் பூட்டிய வீட்டில் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஒரே நேரத்தில் கூடும் 10,000 பெண்கள்.. வள்ளி கும்மி நடன நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர்..!